9 செயற்கைகோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி – சி54

by Staff / 26-11-2022 12:04:19pm
9 செயற்கைகோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி – சி54

இஸ்ரோ உருவாக்கிய பிஎஸ்எல்வி – சி54 ராக்கெட், ஓசோன்சாட்-3 மற்றும் 8 நானோ செயற்கைக்கோள்களுடன் இன்று காலை விண்ணில் ஏவப்படவுள்ளது.ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் ஆராய்ச்சி மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து இன்று காலை 11.56 மணிக்கு பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இதற்கான கவுண்டவுன் நேற்று காலை தொடங்கியது.

இஸ்ரோ வடிவமைத்த புவி கண்காணிப்புக்கான ஓசோன்சாட்-3 நவீன செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவின் ஆஸ்ட்ரோகாஸ்ட், இந்தியா – பூடான் கூட்டு தயாரிப்பான ஐஎன்எஸ்-2பி, துருவா ஸ்பேஸ் நிறுவனத்தின் ஆனந்த் உள்பட 8 நானோ செயற்கைக்கோள்களும் பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் மூலம் வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் விண்ணில் நிலைநிறுத்தப்படவுள்ளன.

இந்த பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட், இஸ்ரோ ஆய்வு மையம் அனுப்பும் 84வது ராக்கெட் ஆகும். மேலும் இந்த ஆண்டு இஸ்ரோவால் விண்ணில் செலுத்தப்படும் 5வது ராக்கெட் இது என  விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அண்மையில் விக்ரம்-எஸ் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், பிஎஸ்எல்வி – சி54 ராக்கெட்டும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via