சிறுவனை தவிக்கவிட்டு மதுபோதையில் திரிந்த தாய் சாவு

by Staff / 02-12-2022 02:05:26pm
சிறுவனை தவிக்கவிட்டு மதுபோதையில் திரிந்த தாய் சாவு

புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கம் அடுத்துள்ள கன்னியக்கோவில் பச்சைவாழி அம்மன் கோவில் திடலில் 3 வயது மகனுடன் இருளஞ்சந்தை புறாந்தொட்டி பகுதியை சேர்ந்த ராணி (45) என்ற பெண் தங்கி இருந்தார். கணவர் இல்லாததால் வேறுநபருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். குடிபோதைக்கு அடிமையான அவர்கள் எப்போதும் மது போதையிலேயே இருந்து வந்தனர். இந்தநிலையில் ராணியின் 3 வயது மகன் பசியால் வாடினான். இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் கையேந்தி அவர்கள் கொடுப்பதை வாங்கி சாப்பிட்டு வந்தான். இந்தநிலையில் அங்கு வந்த கிருமாம்பாக்கம் ரோந்து போலீசார் இதைப்பார்த்து ராணியை எச்சரித்ததுடன் குழந்தையை கவனித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

ஆனால் அதன் பிறகும் போதையில் மகனை ராணி கண்டும், காணாமல் இருந்து வந்தார். சிறுவன் கையேந்துவதும் தொடர்ந்தது. இந்தநிலையில் கடந்த 18ஆம் தேதி மீண்டும் அந்த பகுதியில் ரோந்து சென்ற அதே போலீசார், அந்த சிறுவனின் நிலை கண்டு பரிதாபப்பட்டனர். உடனே தங்களது சொந்த செலவில் அவனுக்கு உணவு, உடை வாங்கி கொடுத்து, குழந்தைகள் நலக்குழுவுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி ராணியிடம் பேசி சிறுவனை மீட்டு குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைத்தனர்.

போதைக்கு அடிமையான தாயிடம் இருந்து சிறுவனை மீட்ட போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். தற்போது அந்த சிறுவன் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறான். போதையில் சாவு தொடர்ந்து மதுகுடித்து வந்த நிலையில் நேற்று கன்னியக்கோவிலில் உள்ள சாராயக்கடை அருகே சிறுவனின் தாய் ராணி உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலில் எந்த காயமும் இல்லை. இறந்து 2 நாட்கள்ஆகி இருக்கலாம் என தெரிகிறது.

அதிக மதுபோதை காரணமாக தடுமாறி விழுந்த ராணி உயிரிழந்திருக்கலாம் என தெரிகிறது. இதுபற்றி தகவல் அறிந்த கிருமாம்பாக்கம் போலீசார் அங்கு சென்று ராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காப்பகத்தில் சிறுவன் ஒப்படைக்கப்பட்டு ஒருவாரமே ஆன நிலையில் அவனது தாய் போதையால் இறந்து போனார். உரியநேரத்தில் சிறுவன் மீட்கப்படாமல் இருந்திருந்தால் அவனது கதி என்னவாகி இருக்கும்? என்று அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டனர்.

 

Tags :

Share via

More stories