மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி - பெண் போலீஸ் உள்பட 4 பேர் காயம்.

by Staff / 15-12-2022 02:04:59pm
மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி - பெண் போலீஸ் உள்பட 4 பேர் காயம்.

புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரன். இவரது மனைவி ராஜ குமாரி. இவர்களது மகள் அஜிதா (வயது 29). இவர், நாகர்கோவில் ஆயுதப்படையில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். இவரது சகோதரர் அஜின் (27). நேற்று மாலை அஜின் தனது மோட்டார் சைக்கிளில் சகோதரி அஜிதாவை அழைத்துக் கொண்டு தேங்காய் பட்டினத்தில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தார். முஞ்சிறை பகுதியில் சென்று கொண்டிருந்த போது உறவினர் வீட்டிற்கு சென்று இருந்த தாயார் ராஜகுமாரி வந்து கொண்டிருந்தார். இதையடுத்து அஜின் மோட்டார் சைக்கிளை ரோட்டோரமாக நிறுத்தி தாயாரிடம் பேசி கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக அதே பகுதியை சேர்ந்த எட்வின், தினேஷ் இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்தனர். இவர்களது மோட்டார் சைக்கிள் அஜின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அஜினுக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அஜிதாவும் படுகாயம் அடைந்தார். ராஜகுமாரி, எட்வின், தினேஷுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. உடனே 5 பேரையும் சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அஜிதா திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அஜினை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி அஜின் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தாயார் மற்றும் சகோதரி கண் எதிரே நடந்த விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் புதுக்கடை பகுதி யில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via