கேரள கழிவுகள் கொட்டுவதை தடுக்க தனிப்படை: ஐ.ஜி., ஆஸ்ரா கர்க்

by Editor / 21-12-2022 10:14:06am
கேரள கழிவுகள் கொட்டுவதை தடுக்க தனிப்படை: ஐ.ஜி., ஆஸ்ரா கர்க்

தென்காசி: கேரளாவில் இருந்து மருத்துவ, இறைச்சி கழிவுகளை தென்மாவட்டங்களில் கொட்டுவதை தடுக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என, தென் மண்டல ஐ.ஜி., ஆஸ்ரா கர்க் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் இருந்து லாரிகளில் இறைச்சி, மருத்துவக்கழிவுகள், கட்டட இடிபாடுகளை திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லாரிகளில் கொண்டு வந்து கொட்டுகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன் நீர் நிலைகளும் அசுத்தமாகின்றன. 

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: கேரள கழிவுகள் கொட்டப்படுவதை தவிர்க்க தென் மாவட்ட கனரக வாகன உரிமையாளர்களிடம் விளக்கப்பட்டது. தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் இரண்டு, ஆலங்குளத்தில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 7 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கழிவுகளைக் கொண்டு வந்த 45 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு கேரளாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. தென்காசி மாவட்ட எஸ்.பி., கிருஷ்ணராஜ் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு வந்த புனலூர் கிருஷ்ணகுமார், திருநெல்வேலி புரோக்கர் கருப்பசாமியை கைது செய்துள்ளார் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via