மஸ்தான் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு: மு.க.ஸ்டாலின் இரங்கல்
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவர் டாக்டர் மஸ்தான் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முன்னாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவருமான டாக்டர் மஸ்தான் மறைவெய்தினார் என்ற துயர்மிகு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது தனி மரியாதையும், பற்றும் பாசமும் மிகுந்தவராக தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்துடன் பயணித்து வந்த டாக்டர் மஸ்தான் அவர்கள் என்றைக்கும் இயக்க உணர்வை நெஞ்சில் ஏந்தி பணியாற்றிய செயல்வீரர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவுச் செயலாளராக - அந்த அணியின் பணி சிறக்க தன்னை முழு மூச்சாக அர்ப்பணித்துக் கொண்டவர். மனித நேயராக, சமூக சேவகராக - தீவிர கழகத் தொண்டராக பணியாற்றிய டாக்டர் மஸ்தான் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் - கழகத்தினருக்கும் - சிறுபான்மையினச் சகோதர, சகோதரிகளுக்கும் எனது அனுதாபத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
Tags :