4 மாவட்டங்களில் இன்று கோவில்கள் திறப்பு

by Editor / 28-06-2021 07:07:11pm
 4 மாவட்டங்களில் இன்று கோவில்கள் திறப்பு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 48 நாட்களுக்கு பிறகு இன்று கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. பக்தர்கள் இன்றி, தினசரி பூஜைகள் மட்டும் நடத்த அனுமதிக்கப்பட்டிருந்தது.

மேலும் தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் மாத சம்பளம் இன்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் இதரப் பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் கொரோனா கால நிவாரண உதவியாக ரூ.4 ஆயிரம் தொகை, 10 கிலோ அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ள நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றின் அடிப்படையில் 3 வகைகளாக மாவட்டங்கள் பிரித்து வெவ்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 3 வகையாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தனித்தனியாக அறிவிக்கப்பட்ட தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, 3ம் வகை பிரிவில் உள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று முதல் கோவில்களில் அரசு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதற்காக பக்தர்களின் பாதுகாப்பிற்கு கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கோவிலின் பிரகாரங்களில் கிருமிநாசினி கலந்த தண்ணீரால் சுத்தப்பட்டது. சமூக இடைவெளியுடன் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்ய வசதியாக ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டது. நுழைவுவாயிலில் கிருமிநாசினி வழங்குவதற்காகவும், உடல் வெப்பத்தை பரிசோதனை செய்யவதற்காகவும் வசதி செய்யப்பட்டிருந்தது. கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது.

அரசின் உத்தரவுப்படி இன்று அதிகாலை கோவில்களில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. இதனையடுத்து பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்தும் வந்து சாமி தரிசனம் செய்தனர். 48 நாட்களுக்கு பிறகு கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

இரவு 8 மணி வரை அனுமதி

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கப்பட்டது. தொடர்ந்து உடல்வெப்பம் பரிசோதிக்கப்பட்டது.

வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

* காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* கோவிலில் இருக்கும் சிலைகளை பக்தர்கள் தொடுவதற்கு அனுமதி கிடையாது

* விபூதி, குங்குமம் மற்றும் இதர பிரசாதங்களை வழங்குவதை தவிர்க்க வேண்டும்.

* அர்ச்சனைக்காக பூ, பழம், தேங்காய் கொண்டு செல்ல அனுமதி கிடையாது.

* முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

சென்னையில்...

சென்னையில் பிரசித்தி பெற்ற வடபழனி முருகன் கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், தி.நகர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களான வரதராஜ பெருமாள் கோவில், காஞ்சி காமாட்சியம்மன் கோவில், ஏகாம்பரநாதர் கோவில், குமரக்கோட்டம் முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்கள் பக்தர்களின் தரிசனத்திற்காக இன்று காலை 7.30 மணிக்கு திறக்கப்பட்டது.

காஞ்சிபுரம் காந்தி ரோட்டில் பிரசித்தி பெற்ற வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் பொ.ஜெயராமன் மேற்பார்வையில், செயல் அலுவலர் ஆ.குமரன், மேலாளர் மணிகண்டன் ஆகியோர் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

இதேபோல 4 மாவட்டங்களில் இஸ்லாமிய, கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டு, மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

100 சதவீத பணியாளர்கள்

3-ம் வகை மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அத்தியாவசிய பணிகள் தவிர மற்ற பணிகளைச் செய்யும் அனைத்து அரசுத் துறை அலுவலகங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இன்று இயங்கின. ஐ.டி. நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கப்பட்டன.

அருங்காட்சியகம், நினைவிடங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஏ.சி. இல்லாமல் 50 சதவீத நபர்களுடன் உடற்பயிற்சி கூடங்கள், யோகா மையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், அவைகளும் இன்று காலை திறக்கப்பட்டன.

கடற்கரைகளிலும் காலை 5 மணி முதல் காலை 9 மணி வரை நடைபயிற்சி செய்ய அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து மெரீனா, பெசன்ட் நகர் சாலைகளில் மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளத் தொடங்கினர்

 

Tags :

Share via