சிறுமி பலாத்காரம்: பெரியப்பா உட்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை

by Staff / 24-12-2022 02:52:00pm
 சிறுமி பலாத்காரம்: பெரியப்பா உட்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் என்கிற மகாராஜா (24). இவர் கடந்த 2020ஆம் ஆண்டு ஆடு மேய்க்க சென்ற பிளஸ் 2 மாணவியான 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அதே கிராமத்தை சேர்ந்த பழனிசாமி (57) என்பவர் பார்த்துள்ளார். அதன் பின் அந்த சிறுமியிடம் அவரது பெற்றோரிடம் சொல்லிவிடுவதாக பழனிசாமி மிரட்டி தனது இச்சைக்கு பயன்படுத்தினார். உறவு முறையில் சிறுமிக்கு பழனிசாமி பெரியப்பா ஆவார்.

இந்நிலையில், சிறுமிக்கு வயிற்று வலி அதிகமானதால் அவரது பெற்றோர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அங்கு சிறுமியை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து சிறுமியிடம் கேட்ட போது கோவிந்தராஜ், பழனிசாமி ஆகியோர் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார்.

இதற்கிடையில் சிறுமிக்கு கடந்த ஆண்டு (2021) செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கோவிந்தராஜ், பழனிசாமி ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் கோவிந்தராஜுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 2 லட்சம் அபராதமும், பழனிசாமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 3 லட்சம் அபராதமும், சிறுமியை மிரட்டியதற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ. 2½ லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார். மேலும் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை சிறுமிக்கு இழப்பீடாக வழங்கவும் தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பிறந்த குழந்தையின் மரபணு பரிசோதனையில் அதன் தந்தை பழனிசாமி என உறுதியானதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், அந்த குழந்தை தத்து கொடுக்கப்பட்டதாகவும் கூறினர். தண்டனை விதிக்கப்பட்ட 2 பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இந்த வழக்கு கடந்த நவம்பர் மாதம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில் ஒரே மாதத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டதாக நீதிமன்றம் தரப்பில் தெரிவித்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் விசாரணை செய்த இன்ஸ்பெக்டர் லதா மற்றும் நீதிமன்ற பணி ஏட்டு சீதாலட்சுமி ஆகியோரை மாவட்ட போலீஸ் எஸ்.பி., வந்திதா பாண்டே பாராட்டினார்.

 

Tags :

Share via