7 கிலோ கஞ்சா பறிமுதல் 3 வாலிபர்கள் கைது.

by Staff / 14-01-2023 03:47:25pm
 7 கிலோ கஞ்சா பறிமுதல் 3 வாலிபர்கள் கைது.

குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கைது செய்பவர்களை போலீசார் குண்டச்சட்டத்தின் கீழ் ஜெயலில் அடைத்து வருகின்றனர். இதையடுத்து தற்போது குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை ஓரளவு கட்டுக்குள் இருந்து வருகிறது. இந்த நிலையில் தனிப்படை போலீசார் ஆலம்பாறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த மூன்று வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் சோதனை நடத்திய போது கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்டவரிடம் விசாரித்த போது கோட்டார் வாகையடி தெருவை சேர்ந்த சொரிமுத்து (வயது 21) கோட்டாரை சேர்ந்த தனுஷ் ஆலம்பாறை அழகர் கோணம் பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் (29) என்பது தெரிய வந்தது. போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். கஞ்சா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கோட்டார், வடசேரி பகுதியில் பதுக்கி வைத்திருந்த 7 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கஞ்சா பதுக்கல் வழக்கில் மேலும் 4 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கோட்டார் பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் 45 குணால், மணி, சக்தி ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கஞ்சா ஆந்திராவில் இருந்து கொண்டு வந்து இங்கு விற்பனை செய்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களின் வங்கி கணக்குகளை முடக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகி றார்கள். தலைமறைவாக 4 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள்.

 

Tags :

Share via