திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

by Staff / 17-01-2023 04:22:59pm
 திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலையில் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனையை தொடர்ந்து மற்றகால பூஜைகள் நடைபெற்றது.காணும் பொங்கலையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. காலை 10. 30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலையில், சுவாமி அலைவாயுகந்த பெருமான் பரிவேட்டைக்காக வெள்ளிக்குதிரையில் எழுந்தருளி பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள வேட்டைவெளி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு பரிவேட்டைக்கு பின்னர் சுவாமி ரதவீதி சுற்றி சன்னதி தெரு வழியாக கோவிலை சேர்ந்தார்.விழாவையொட்டி நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். பெரும்பாலான பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கடலில் ஆழமான பகுதிக்கு பக்தர்கள் செல்லாத வகையில் மிதவை தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன.திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

Tags :

Share via