கொடைக்கானலில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்

by Staff / 17-01-2023 05:26:40pm
கொடைக்கானலில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்

கொடைக்கானலில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்; 3 கி. மீ. தூரத்துக்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்
சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். வார விடுமுறை, விசேஷ நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருவார்கள். அந்த வகையில் பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டதால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. பொங்கல் பண்டிகை அன்று சுற்றுலா பயணிகள் வருகை சுமாராக இருந்தது. அதிகாலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர். சுற்றுலா வேன், கார், இருசக்கர வாகனங்களில் அதிக அளவில் வந்தனர். இதனால் கொடைக்கானல் நகரின் முக்கிய பகுதிகளான அப்சர்வேட்டரி, ஏரிச்சாலை, மூஞ்சிக்கல், உகார்த்தேநகர், செண்பகனூர், நாயுடுபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
குறிப்பாக கொடைக்கானல் நுழைவுவாயில் பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் சுமார் 3 கி. மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதேபோல் சுற்றுலா இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் அவதியடைந்தனர். இதேபோல் வனத்துறை சார்பில் சுற்றுலா இடங்களை காண்பதற்கு, ஒரே இடத்தில் நுழைவு கட்டணம் வசூல் செய்யப்பட்டதால் அங்கும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இருப்பினும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்

இதற்கிடையே கொடைக்கானல் நகரை ஒட்டியுள்ள மோயர் பாயிண்ட், பில்லர்ராக், குணா குைக, பைன்மரக்காடு, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட சுற்றுலா இடங்களையும், பாாம்பார் நீர்வீழ்ச்சி, தேவதை அருவி, பியர்சோழா அருவி, வெள்ளி நீர்வீழ்ச்சி, அஞ்சுவீடு அருவி உள்ளிட்ட அருவிகளையும் பார்த்து ரசித்தனர். அப்போது தங்களது செல்போன், கேமராக்களில் புகைப்படம் எடுத்தும், 'செல்பி' எடுத்தும் மகிழ்ந்தனர். மேலும் நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர். இதுதவிர பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்காவை பார்வையிட்டு பொழுதுபோக்கினர்.

 

Tags :

Share via