அதிமுக முன்னாள்  அமைச்சரின்  உறவினர்கள் கட்டிய கட்டிடம் இடிப்பு

by Editor / 03-07-2021 05:18:21pm
 அதிமுக முன்னாள்  அமைச்சரின்  உறவினர்கள் கட்டிய கட்டிடம் இடிப்பு

 


 சிவகங்கை நகரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவுரி பிள்ளையார் கோயிலுக்கு சொந்தமாக 142 ஏக்கர் 8 சென்ட் இடம் உள்ளது. இந்த இடத்தில் சர்வே எண் 335 மற்றும் 330ல் உள்ள சுமார் 9 ஏக்கர் 58 சென்ட் நிலத்தை அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சராக இருந்த பாஸ்கரனின் உறவினர்கள் போலியாக பத்திரம் தயார் செய்து ஆக்கிரமித்து அதில் கம்பி வேலி அமைத்தனர்.
 இடத்தின் ஒரு பகுதியில் வணிக வளாகம் கட்டிடம் கட்டினர்.'ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலத்தை மீட்க வேண்டும், வணிக வளாக கட்டிடப்பணியை நிறுத்த வேண்டும்' என வலியுறுத்தி சிவகங்கை திமுக நகர் செயலாளர் துரைஆனந்த், தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு புகார் மனு அனுப்பினார். இந்நிலையில் சிவகங்கை திமுக மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் ஐகோர்ட் மதுரை கிளையில், பொதுநல வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர், ''அறநிலையத்துறையின் நோட்டீஸ்படி ஆக்கிரமிப்பாளர்கள் கட்டிடத்தை அகற்றிக் கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால் அறநிலையத்துறை சார்பில் கட்டிடத்தை அகற்றி விட்டு, அதற்கான செலவை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து வசூல் செய்ய வேண்டும். இந்த நடவடிக்கைகளை 12 வாரத்திற்குள் முடிக்க வேண்டும்'' என்று கடந்த 28ம் தேதி உத்தரவிட்டனர். 
இதையடுத்து வெள்ளிக்கிழமை  காலை சிவகங்கை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்வி தலைமையில் ஜேசிபி இயந்திரம் மூலம் இந்த 3 கட்டிடங்களையும் இடிக்கும் பணி,2 மணி நேரம் நடந்தது. அனைத்துக் கட்டிடங்களும் தரைமட்டமாக்கப்பட்டன. 

 

Tags :

Share via