செயற்கை நீர்வீழ்ச்சிகள் வனத்துறை உயரதிகாரிகள் ஆய்வு.

by Editor / 28-01-2023 08:54:35am
செயற்கை நீர்வீழ்ச்சிகள் வனத்துறை உயரதிகாரிகள் ஆய்வு.


தென்காசி மாவட்டம், மேக்கரை பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் இருந்து இயற்கையாக வரும் நீரோடைகளை மறித்து இயற்கைக்கு மாறாக செயற்கை நீர்வீழ்ச்சிகள் கட்டப்பட்டுள்ளதாகவும், இதனால் விவசாயத்திற்கு பயன்படும் தண்ணீர் பாதிக்கப்படுவதாகவும், மேலும், வனப்பகுதியில் இருந்து யானை உள்ளிட்ட வன உயிரினங்கள் வெளியேறி விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவதாகவும் விவசாயிகள் அளித்த புகாரின் அடிப்படையில், தென்காசி மாவட்ட ஆட்சியர் இயற்கைக்கு மாறாக கட்டப்பட்டுள்ள செயற்கை நீர்வீழ்ச்சிகள் அனைத்தையும் இடிக்க அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

 இந்த நிலையில், அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த வினோத் என்பவர் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் செயற்கை நீர்வீழ்ச்சிகளை கட்டி அதனை வைத்து ரிசார்ட்கள் கட்டி வணிக ரீதியான பயன்பாட்டிற்கு அதை பயன்படுத்தி வருவதால், வன உயிரினங்கள் அனைத்தும் வெளியேறி விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்தநிலையில், செயற்கை நீர்வீழ்ச்சிகள் குறித்து முறையாக ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்த நிலையில், செயற்கை நீர்வீழ்ச்சிகள் குறித்து ஆய்வு நடத்த 10 பேர் கொண்ட அதிகாரிகளை தமிழக அரசு நியமனம் செய்தது.

 அந்த அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வனப்பகுதியில் இயற்கையாக ஓடும் நீரோடைகளை மறித்து செயற்கை வீழ்ச்சிகள் கட்டப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தனர் 

இந்த நிலையில், தற்போது இந்த செயற்கை நீர்வீழ்ச்சிகளால் யானை வழித்தடங்கள் ஏதேனும் பாதிக்கப்பட்டுள்ளதா? செயற்கை நீர்வீழ்ச்சிகள் மற்றும் ரிசார்ட்களால் வன உயிரினங்கள் வேறு ஏதேனும் பாதிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து இன்று வனத்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

 மேலும், யானைகள் எந்தெந்த வழித்தடங்களில் சென்றுள்ளது, செயற்கை நீர்வீழ்ச்சிகளால் யானைகள் குடிக்கும் தண்ணீருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

 இந்த ஆய்வின் அறிக்கையை அரசிடம் சமர்ப்பணம் செய்து யானை வழித்தடங்களை மாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via