ஐடி பெண் ஊழியர் உயிரிழந்த விவகாரம்-இருவரை போலீசார் கைது செய்தனர்.

by Editor / 28-01-2023 09:19:33am
ஐடி பெண் ஊழியர் உயிரிழந்த விவகாரம்-இருவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அண்ணாசாலை ஆயிரம் விளக்கு மசூதி அருகே உள்ள பழைய கட்டடங்களை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று காலை ஜேசிபி இயந்திரம் மூலம் அண்ணாசாலையில் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த பழைய கட்டடம் ஒன்றை இடிக்கும் பணி நடைபெற்றது. அப்போது, திடீரென ஒரு பகுதி கட்டட சுவர் இடிந்து வெளிப்புறமாக விழுந்தது.

இது சாலையில் சென்றுகொண்டிருந்த இரண்டு பெண்கள் மீது விழுந்தது. இதனால், அவர்கள் இருவருமே இடிப்பாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் உடனடியாக ஆயிரம் விளக்கு பகுதி காவல்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கிய பெண்களை மீட்கும் பணியில் இறங்கினர். சுமார் 20 நிமிடமாக போராடி, இரு பெண்களையும் படுகாயங்களுடன் தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

உடனடியாக இருவரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒரு பெண் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், உயிரிழந்த பெண், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த பிரியா என்பதும், சென்னையில் தங்கி ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படாமல் கட்டடம் இடிக்கப்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இச்சம்பவம் தொடர்பாக ஜேசிபி இயந்திரத்தின் உரிமையாளரான ராமாபுரத்தைச் சேர்ந்த ஞானசேகர் மற்றும் ஜேசிபி ஆப்ரேட்டரான பாலாஜி ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் பணி நடைபெற்றுள்ளதால் கட்டிடம் இடிக்கும் பணியை உடனடியாக நிறுத்த சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via