கொடைக்கானல் வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்
கொடைக்கானல் மலைப்பகுதியில் 60 சதவீதம் வனப்பகுதியாக உள்ளது. இங்கு காட்டெருமை, குரங்குகள் உள்ளிட்ட வன விலங்குகளும், அரியவகை பறவைகளும் உள்ளன. கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலம் என்பதால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் சிலர் வனப்பகுதிக்குள் தண்ணீர் பாட்டில், மதுபாட்டில், பாலித்தீன் பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி செல்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடைவிதிக்கப்பட்டது. இருப்பினும் கொடைக்கானல் வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவது தொடர்கதையாக உள்ளது.இதற்கிடையே கொடைக்கானலை சேர்ந்த ஒரு தன்னார்வ அமைப்பினர் மாதம் ஒருமுறை வனப்பகுதியில் கொட்டிக்கிடக்கும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியை வழக்கமாக மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அமைப்பினர், கொடைக்கானல் அரசு கல்லூரி மாணவிகளுடன் இணைந்து நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பாம்பே சோலை வனப்பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பாலித்தீன் பைகள் என 1 டன் குப்பைகள் சேகரமானது. பின்னர் அவற்றை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து கொடைக்கானல் குப்பைக்கிடங்குக்கு எடுத்து சென்றனர்.இதுகுறித்து அந்த அமைப்பினர் மற்றும் கல்லூர் மாணவிகள் கூறுகையில், கொடைக்கானல் வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் கண்ணாடி பாட்டில்களால் வன விலங்குகள், பறவைகள் பாதிக்கப்படுகின்றன. எனவே சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வனப்பகுதிக்குள் மதுபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை வீசுவதை தவிர்க்க வேண்டும் என்றனர்.
Tags :