தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழாபேனர் கிழிப்பு.. தென்காசி மாவட்டத்தில் உச்சத்தைத் தொடும் கோஷ்டி மோதல்.

by Editor / 18-02-2023 11:09:15am
தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழாபேனர் கிழிப்பு..  தென்காசி மாவட்டத்தில் உச்சத்தைத் தொடும் கோஷ்டி மோதல்.

ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் இருந்து, தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்ட 4ஆண்டுகள் ஆகியுள்ள சூழலில், தென்காசி மாவட்டத்தை அமைப்பு ரீதியாக தேசிய கட்சிகளைத்தவிர மாநில அரசியல் கட்சியினர்  வடக்கு மாவட்டம், தெற்கு மாவட்டம் என 2 பிரித்து தங்களது நிர்வாகிகளை நியமனம் செய்து கட்சிப் பணியாற்றி வருகின்றனர்.

இதில் திமுகவில் இதே நிலைதான்.ஆரம்பத்தில் நன்றாக போன இவர்களின் கட்சி பணிகள் தற்போது 'வரவர மாமியார், கழுதை போல போனாளாம்' என்கின்ற பழமொழிக்கு ஏற்ப வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த செல்லத்துரை என்பவர் மாற்றப்பட்ட நாள் முதல் தென்காசி மாவட்ட திமுகவில் பல்வேறு உட்க்கட்சி பூசல்கள் வெடிக்க ஆரம்பித்தன.

 சிறிது, சிறிதாக வெடித்த உட்கட்சி பூசலானது தற்போது உச்சத்தை ஏட்டியுள்ள சூழலில், தென்காசி தெற்கு மாவட்டத்தில் தற்போது வெளிப்படையாகவே கோஷ்டி  மோதல் அரங்கேறி வருகிறது.

 குறிப்பாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட பஞ்சாயத்து தலைவியான தமிழ்செல்வி என்பவருக்கு, பாவூர்சத்திரம் பேரூராட்சி திமுக செயலாளராக உள்ள ஜெகதீஷ் என்பவர் ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியதாக கூறி, அவரது கணவர் ஜெகதீஷை வசைப்பாடி ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சூழலில், நேற்று முன்தினம் கடையம் யூனியன் சேர்மன் செல்லம்மாள், கடையம் தெற்கு ஒன்றிய செயலாளராக உள்ள ஜெயக்குமார் என்பவர் தன்னை பணி செய்யவிடாமல் தொடர்ந்து துன்புறுத்தி வருவதாகவும், அதனால் தான் தற்கொலை செய்யப் போவதாகவும் முதல்வருக்கு ஒரு பரபரப்பு கடிதம் எழுதி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார்.

 இந்த நிலையில், நேற்று செங்கோட்டை அருகே உள்ள கட்டளை குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற அரசு திட்டத்திற்கான பூமி பூஜை விழாவில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை அழைக்காமல் மக்கள் பிரதிநிதிகள் தன்னிச்சயாக நிகழ்ச்சி நடத்தியதை  கண்டித்து  திமுக நிர்வாகி ஒருவர் ரகளையில் ஈடுபட்டு கைகலப்பான சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தது.

 இந்த நிலையில், அடுத்ததாக தற்போது தென்காசி நகரப் பகுதியில் கோஷ்டி பூசலானது வெடித்துள்ளது. அதாவது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து சொல்லும் விதமாக தென்காசி நகரதிமுக சார்பில் தென்காசி நகரில் உள்ள முக்கிய பகுதிகளில் டிஜிட்டல் வைத்துள்ளார்.

 இது பிடிக்காத சில திமுகவினர்  பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, தென்காசி காசிவிசுவநாதர் கோயில் அருகில் வைக்கப்பட்டிருந்த பேனரை திமுக நிர்வாகி ஒருவர் கிழித்து எரிந்த நிலையில்  தற்போது புதிய பேருந்து நிலையம் அருகில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனரை கிழிக்கும் சி.சி.டி.வி.காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், தென்காசி புதிய பேருந்து நிலையம் எதிரே பேனர் வைக்க முயன்ற திமுகவினரை, தென்காசி நகர துணை தலைவர் சுப்பையா என்பவர், இங்கு பேனர் வைக்க கூடாது என கூறி பிரச்சினையில் ஈடுபட்ட சம்பவம் குறித்தான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 ஆக மொத்தம் தென்காசி மாவட்டத்தில் உள்ள திமுகவினர் இரு கோஷ்டிகளாக பிரிந்து, அதாவது மக்கள் பிரதிநிதிகள் ஒரு குழுவாகவும், அரசியல் பிரமுகர்கள் ஒரு குழுவாகவும் பிரிந்து நாளுக்கு நாள் சண்டையிட்டு வருவது திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 மேலும், திமுகவினர் ஒருவரை ஒருவர் தாக்கி, பொதுவெளியில் சண்டையிட்டு வருவதால் பொதுமக்களுக்கு திமுகவின் மீதான விழிப்புணர்வும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும், இதே நிலைமை திமுகவினரிடையே நீடித்து வந்தால் திமுக எனும் கட்சி என்பது தென்காசி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டத்தில் அழியும் நிலைமை ஏற்படும் என திமுகவின் மூத்த நிர்வாகிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில் கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளலாமல் ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்த்தவர்கள் பலர் தற்போது உள்ளாட்சி பொறுப்புக்களுக்கு வந்துள்ளதால் அவர்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை மதிக்காமல் கோஷ்டிகளை உருவாக்கி அரசியல் செய்துவருவதால் இந்த குழப்பம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.இந்த குழப்பங்க்ளுக்கு முன்னாள் நிர்வாகிகள் சிலரின்  ஆதரவாளர்களே முழுக்காரணம் என கூறப்படுகிறது.

 

Tags :

Share via