ராணுவ வீரர் பிரபு கொலை..? அமித்ஷாவை சந்திக்க செல்கிறார் அண்ணாமலை..?
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபு. இவரும், இவரது சகோதரரான பிரபாகரனும் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, பிரபாகரனின் மனைவி பிரியா, தெருவில் உள்ள ஊராட்சி பொது தண்ணீர் தொட்டியின் முன் துணி துவைத்துள்ளார்.
இதனைக் கண்ட நாகோஜனஹள்ளி பேரூராட்சி கவுன்சிலர் சின்னசாமி, இது பொது தண்ணீர் தொட்டி, இதில் துணி துவைக்க கூடாது என்று கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே அருகில் இருந்தவர்கள் சமரசம் செய்து அனுப்பியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, ராணுவவீரர் பிரபாகரன், கவுன்சிலர் சின்னசாமியை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், ஆத்திரமடைந்த கவுன்சிலர் சின்னசாமி தனது உறவினர்கள் 10க்கும் மேற்பட்டோருடன் சென்று பிரபாகரனை தாக்கினார். இதனை தடுக்க சென்ற அவரின் தம்பி பிரபுவையும் கற்கள் மற்றும் இரும்பு ஆயுதங்களால் அவர்கள் தாக்கியுள்ளனர்.
இதில், பலத்த காயமடைந்த பிரபு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக கவுன்சிலர் சின்னசாமி, ஆயுதப் படை காவலர் குருசூர்யமூர்த்தி உள்ளிட்ட 9 பேரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்ததோடு, தமிழ்நாடு அரசு உரிய விசாரணை நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். மேலும் அவரது தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணியும் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு, மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாகச் சென்றனர். தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் மனுவும் அளித்தார்.
இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இன்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின்போது ராணுவ வீரர் கொலை தொடர்பாகவும், கர்நாடக தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags :



















