தமிழ்நாட்டின் தலைமை தகவல் ஆணையர் யார்..?  மார்ச் 3ம் தேதி ஆலோசனை.

by Editor / 23-02-2023 08:06:50am
தமிழ்நாட்டின் தலைமை தகவல் ஆணையர் யார்..?  மார்ச் 3ம் தேதி ஆலோசனை.

தமிழ்நாட்டின் தலைமை தகவல் ஆணையராக இருந்த ஆர்.ராஜகோபால், தகவல் ஆணையர்களாக இருந்த எஸ்.செல்வராஜ், எஸ்.டி.தமிழ்ச்செல்வன், ஆர்.பிரதாப்குமார், எஸ்.முத்துராஜ், பி.தனசேகரன், எம்.ஸ்ரீதர் ஆகியோரின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், அவர்கள் பதவி விலகினர்.

எனவே காலியாக உள்ள அந்த பணியிடங்களுக்கு, புதிய ஆணையர்களை தேர்வு செய்யும் பணியினை தகவல் ஆணையர்கள் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதிவாய்ந்த நபர்களின் பட்டியலை, அதனை தயார் செய்ய அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர் அலி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார்.

இந்நிலையில், தகவல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. அரசமைப்பு சட்டம் சார்ந்த பதவிகள் என்பதால் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களின்  பெயர்கள் ஆளுநரின் ஒப்புதலை பெற்ற பின்னர், அரசிதழில் வெளியிடப்படும். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக உள்ள இறையன்புவின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், அவரும் தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via