யானை தாக்கி  இருவர் பலி-வனத்துறை எச்சரிக்கை.

by Editor / 03-03-2023 07:58:21am
யானை தாக்கி  இருவர் பலி-வனத்துறை எச்சரிக்கை.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால், கோவை உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி அருகில் உள்ள கிராமங்களுக்கு வருகின்றன. இந்நிலையில் தடாகம் அடுத்த மாங்கரை வனச் சோதனை சாவடி அருகே வனத்தில் இருந்து அதிகாலை வெளியேறிய ஒற்றை ஆண் யானை ராமச்சந்திரன் என்பவரது தோட்டத்துக்குள் புகுந்துள்ளது.அங்கு அவரது மருமகன் மகேஷ் குமார் யானையை விரட்ட முயற்சித்துள்ளார். அப்போது திடீரென யானை அவரை காலால் மிதித்துவிட்டது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சத்தம் கேட்ட அங்கிருந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் யானையை விரட்டி மகேஷ் குமாரின் உடலை மீட்டனர்.

அதேபோல, ஆனைகட்டி அடுத்த தூவைபதி கிராமத்தை சேர்ந்த மருதாசலம் என்பவர் அதிகாலை இயற்கை உபாதை கழிக்க ஒதுங்கியுள்ளார். அப்போது அவரை ஒற்றை யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், “விவசாய நிலங்களில் யானை புகுந்தால் பொதுமக்கள் யானை விரட்ட முற்படக்கூடாது. வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக அங்கு வந்து யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபடுவார்கள். வனப்பகுதி ஒட்டியுள்ள கிராமங்களில் வசிப்போர் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரும் போது கவனமாக வர வேண்டும். யானை நடமாட்டம் அதிகமாக உள்ளதால் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளனர்.இருப்பினும் மக்கள் அச்சத்தோடு அதிகாலைநேரங்களையும்..இரவையும் கழித்து வருகின்றனர்.

 

Tags :

Share via