கைதியிடம் செல்போன் பறிமுதல்

by Staff / 14-03-2023 01:01:57pm
கைதியிடம் செல்போன் பறிமுதல்

சேலம் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதி என 900-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டு உள்ள கைதிகள் சிலரிடம் கஞ்சா புழக்கம், செல்போன் பயன்பாடுகள் இருப்பது தெரிந்து அவர்கள் மீது சிறை காவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சிறைக்காவலர்கள், ஒவ்வொரு அறையாக சோதனை நடத்தினர். அப்போது ஒரு அறையில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டு உள்ள சேலத்தை சேர்ந்த டேவிட் (வயது 37), குமார் (25) மற்றும் கோபியை சேர்ந்த நவீன்குமார் ஆகிய 3 பேரிடம் சோதனை நடத்தப்பட்டன. அதில் டேவிட் என்பவரிடம் இருந்து ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது டேவிட்டுக்கும், சிறை காவலர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இது குறித்து சிறைக்காவலர்கள் அஸ்தம்பட்டி போலீசில் புகார் கொடுத்து உள்ளனர்.அதன்பேரில் சிறைக்காவலரை பணிசெய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறை கைதியிடம் எப்படி செல்போன் வந்தது. அவர் யார்? , யாரிடம் பேசி உள்ளார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து சிறை சூப்பிரண்டு தமிழ்செல்வனிடம் கேட்ட போது கைதிகளிடம் கஞ்சா மற்றும் செல்போன் பயன்பாடுகளை தடுக்க தீவிர சோதனை நடத்தி வருகிறோம். விசாரணைக்காக கைதிகளை கோர்ட்டுக்கு அழைத்து செல்கிறோம். பின்னர் விசாரணை முடிவடைந்து வரும் போது எப்படியோ அவர்களிடம் செல்போன் கிடைத்து விடுகிறது. அதை மறைத்து ஜெயிலுக்குள் எடுத்து வந்து விடுகின்றனர்.எனவே இனி வழக்கு விசாரணைக்கு பிறகு மீண்டும் ஜெயிலுக்கு அழைத்து வரும் போது கைதிகளிடம் தீவிர சோதனை நடத்தி சிறைக்குள் கைதிகளிடம் செல்போன் பயன்பாடு இல்லாத நிலை ஏற்படுத்தப்படும். தற்போது பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சூரமங்கலம் பகுதியில் சிறை காவலர் ஒருவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு உள்ள டேவிட் என்பவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து அஸ்தம்பட்டி போலீசில் புகார் கொடுத்து உள்ளோம். அவர்கள் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அவர்களின் விசாரணைக்கு பிறகு தான் அவருக்கு யார் செல்போன் கொடுத்தது. யார்? யாரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார் என்ற விவரம் தெரிய வரும் என்று கூறினார்.

 

Tags :

Share via