ரூ. 25 லட்சம் கடன் கொடுப்பதாக கூறி லாரி டிரைவரிடம் ரூ. 2½ லட்சம் மோசடி
எடப்பாடி அடுத்த கோரணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 35). லாரி டிரைவர். இவர், மாவட்ட சைபர் கிரைம் போலீசில் அளித்துள்ள புகாரில், எனது செல்போன் எண்ணுக்கு 6 பேர் தொடர்பு கொண்டு ரூ. 25 லட்சம் கடன் கொடுப்பதாக கூறினர். இதற்காக டாக்குமெண்ட சார்ஜ், இன்சூரன்ஸ் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் கூறிய வங்கி கணக்கில் 22 தவணைகளில் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்து 850 செலுத்தினேன். ஆனால் வங்கி கடன் எதுவும் வழங்கவில்லை. இதனால் மோசடி செய்த அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.அதன்பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை சேர்ந்த ரவிராஜன் மற்றும் 5 பேர் கூட்டாக சேர்ந்து கோவிந்தனிடம் பணம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட சைபர் கிரைம் போலீசார், ரவிராஜனை கைது செய்தனர். இதையடுத்து அவரது கூட்டாளிகளான வடமாநிலத்தை சேர்ந்த 5 பேரை தேடி வருகின்றனர்.
Tags :