கூரியர் மூலம் குட்கா புகையிலை கடத்திய 4 பேர் கைது

by Editor / 17-08-2021 09:50:03am
 கூரியர் மூலம் குட்கா புகையிலை கடத்திய 4 பேர் கைது

ஈரோடு மாவட்டத்தில் தமிழக அரசு தடை செய்த குட்கா, பான்மசாலா பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் மாவட்ட எஸ்.பி., சசிமோகன் உத்தரவின் பேரில் டிஎஸ்பி-க்கள் மேற்பார்வையில் அந்தந்த பகுதிக்குட்பட்ட காவல் ஆய்வாளர்கள் கடந்த சில நாட்களாக கடை வீதிகள், மளிகை கடை, குடோன்களில் சோதனை செய்து வருகின்றனர். ஈரோடு மாநகரில் டவுன் டிஎஸ்பி ராஜு மேற்பார்வையில் அந்த பகுதிக்குட்பட்ட ஆய்வாளர்கள் கடைகள், குடோன்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில், பலர் கைதுசெய்யப்பட்டு மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஈரோடு கொங்கலம்மன் கோவில் வீதியில் டவுன் காவல் ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக மொபட்டில் வந்த இளைஞரை பிடித்து சோதனை செய்தபோது, அவர் குட்கா புகையிலை பொருட்களை கடத்திச்சென்றது கண்டு பிடிக்கப்பட்டது. விசாரணையில், அவர் அதே பகுதியை சேர்ந்த ஜிஜெந்தரகுமார்(36) என்பதும், விற்பனைக்காக குட்காவை கடத்திச் சென்றதும் தெரிய வந்தது. தொடர்ந்து, அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதில் ஜிஜெந்தர குமார், அளித்த தகவலின் பேரில், அவருக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்த ஈரோடு மணிக்கூண்டு சொக்கநாத வீதியைச் சேர்ந்த பிரகலாத் குமார்(22), ராமசாமி லைன் 2-வது வீதியை சேர்ந்த பாரராம் (37), லட்சுமணராம் (37) ஆகியோரையும் கைது செய்தனர். தொடர்ந்து, கருங்கல்பாளையத்தில் உள்ள அவர்களது குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.4 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பிலான 468 கிலோ குட்கா, போதை பாக்குகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மூவரிடமும் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் பெங்களூரில் இருந்து கூரியர் மூலம் ஈரோடுக்கு குட்கா பொருட்களை கடத்திவந்து நூதன முறையில் விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.

 

Tags :

Share via