தமிழ்நாட்டிற்கும் மத்திய அரசுக்கும் இணைப்பு பாலமாக இருப்பேன்:  மத்திய அமைச்சர் எல்.முருகன் 

by Editor / 08-07-2021 04:03:24pm
தமிழ்நாட்டிற்கும் மத்திய அரசுக்கும் இணைப்பு பாலமாக இருப்பேன்:  மத்திய அமைச்சர் எல்.முருகன் 

 



தமிழ்நாட்டிற்கும் மத்திய அரசுக்கும் இணைப்பு பாலமாக செயல்படுவேன் என்று புதிதாக மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை  விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 43 பேர் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். இதில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் மத்திய மீன்வளத்துறை, தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை, கால்நடை மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் அவர் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது:
பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்துள்ளனர். தமிழர்களின் நலன் பேணுவதில் தமிழகத்திற்கும் மத்திய அரசுக்கும் இணைப்பு பாலமாக செயல்படுவேன்.
700 கிலோ மீட்டரில் மிகப் பெரிய மீன்வளம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு ஆகும். மீன்வளத்துறை மீனவர் நலனுக்கான மற்றும் மீன்வளத்தைப் பெருக்குவதற்கான துறையாகும். மீனவர்களின் நலன் காப்பதில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லாமல் அரசாங்கம் செயல்படும். மேலும் மீன் ஏற்றுமதியைப் பெருக்குவது, மீன் உற்பத்தியைப் பெருக்குவது மற்றும் மீனவர்களின் நலன் காப்பதில் மத்திய அரசாங்கம் முக்கிய பங்காற்றும்.
பிரதமர் நரேந்திர மோடி எடுத்த நடவடிக்கைகளால் 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக மீனவர்கள் கைது செய்யப்படுவது, தாக்கப்படுவது, படுகொலை செய்யப்படுவது போன்றவை பூஜ்ஜியமாக உள்ளது. அதற்கு முந்தய கால கட்டங்களுடன் ஒப்பிடும்போது இதுபோன்ற நிகழ்வுகள் அதிகளவில் குறைந்துள்ளன.
கட்சத் தீவைத் தாரை வார்த்துக் கொடுத்தது தி.மு.க. தான். கட்சத் தீவில் மீன் பிடிக்கச் செல்லும் போது தமிழக மீனவர்கள் எதிர் கொள்ளும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் நிச்சயமாகத் தீர்வு கிடைக்கும். மீனவர்களின் நலன் காப்பதற்கு நான் மிகவும் உறுதுணையாக இருப்பேன்.தமிழக பா.ஜ.க. தலைவராக நான் தொடர்வேனா இல்லையா என்பது குறித்து கட்சி தலைமை முடிவு எடுக்கும்.இவ்வாறு  தெரிவித்தார்.
 

 

Tags :

Share via