கொளுத்தும் வெயிலில் 2 வயது குழந்தையை நடக்க வைத்து சுமையோடு வந்த கர்ப்பிணிப்பெண்ணுக்கு உதவிய உதவி ஆய்வாளர்.

by Editor / 16-04-2023 11:24:08pm
கொளுத்தும் வெயிலில் 2 வயது குழந்தையை நடக்க வைத்து சுமையோடு வந்த கர்ப்பிணிப்பெண்ணுக்கு உதவிய உதவி ஆய்வாளர்.

நெல்லை ரயில் நிலையத்தில்  காங்கிரஸ் கட்சி சார்பில் 15ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறை துணை ஆணையர் தலைமையில் ரயில் நிலையம் முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், நெல்லை சந்திப்பு காவல் நிலைய உதவி ஆய்வாளரான சுவாதிகாவுக்கு ரயில் நிலைய பாதுகாப்புப் பணி ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் ரயில் நிலையத்தின் 1 வது நடை மேடையில் சகபெண் காவலர்களுடன் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, எதிரே 2-வது நடைமேடையிலிருந்து கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனது 2 வயதுக் குழந்தையுடன் கடும் வெயிலில் பெரும் சிரமத்தோடு தண்டவாளத்தை கடந்து நடந்து வந்துள்ளார். கையில் பெரிய அளவில் லக்கேஜ் பேக் இருந்ததால் அந்த பெண் தனது குழந்தையை மடியில் தூக்கி வைக்க முடியாமல் தரையில் நடக்க வைத்து அழைத்து வந்துள்ளார். அவர்களை அங்கிருந்த பயணிகள் அனைவரும் வேடிக்கை பார்த்துள்ளனர். அந்த பெண்ணுக்கு உதவ யாரும் முன் வரவில்லை. அப்போது பெண் காவலர்கள் கூட்டத்திலிருந்த உதவி ஆய்வாளர் சுவாதிகா, கர்ப்பிணிப் பெண்ணை பார்த்ததும் ஓடிச் சென்று அவருக்கு உதவினார்.

கர்ப்பிணிப் பெண்ணின் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அடுத்த நடை மேடைக்குச் சென்று அங்குக் காத்திருந்த கர்ப்பிணிப் பெண்ணின் உறவுக்கார  பெண்ணிடம் ஒப்படைத்தார். கர்ப்பிணிப் பெண், காவல் உதவி ஆய்வாளருக்கு நன்றி தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

 

Tags :

Share via