12 மணி நேர வேலை மசோதா தொழிலாளர்கள் ஒப்புதலுடன் மாற்றங்களைச் செய்ய வேண்டும் தமிழிசை

by Staff / 27-04-2023 01:46:42pm
12 மணி நேர வேலை மசோதா தொழிலாளர்கள் ஒப்புதலுடன் மாற்றங்களைச் செய்ய வேண்டும் தமிழிசை

12 மணி நேர வேலை மசோதாவை தொழிலாளர்கள் ஒப்புதலுடன் மாற்ற வேண்டும் என்று புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 
12 மணி நேர வேலைத்திட்டத்திற்கு ஆதரவான என்னுடைய கருத்து தொழிலாளர் நலனுக்கு எதிரான கருத்தாக முன்வைக்கப்படுகிறது. தொழிலாளர் நலனையும் தொழில் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டே நான் இந்த மசோதாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கிறேன்.

நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு இந்த 12 மணி நேர வேலை மசோதா உதவி புரியும். 12 மணி நேர வேலை மசோதா விவகாரத்தை தொழிலாளர்களின் விருப்பத்திற்கு விட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.தொழிலாளர்களின் ஒப்புதலோடு போன்ற மாற்றங்களை படிப்படியாக கொண்டு வர வேண்டும். அதையும் தாண்டி மாற்றுக் கருத்து இருந்தால் அவற்றை ஆராய்ந்து அவற்றுக்கு மதிப்பளிக்கும் வகையில் அரசுகள் நடந்து கொள்ள வேண்டும்.

பணி புரியும் நேரம் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக அதிகரிக்கிறதே தவிர ஊழியர்களின் ஒட்டுமொத்த பணி நேரம் அதிகரிக்கப்படவில்லை. 6 நாட்களில் 8 மணி நேர வேலையில் மொத்தம் 48 மணி நேரம் உழைக்கும் தொழிலாளர்கள் 12 மணி நேர வேலையில் அதை 4 நாட்களில் செய்து முடிக்கலாம்.
3 நாட்கள் அவர்கள் தங்கள் குடும்பத்தோடு, உறவுகளோடு ஓய்வெடுத்து உளவியல் ரீதியாக புதுதெம்பு பெற்று அடுத்தகட்ட பணியில் ஈடுபட முடியும்.ஆக்கபூர்வமான பல செயல்பாடுகளில், பணிகளில் ஈடுபடுவதற்கு இது உதவியாக இருக்கும். ஏற்கனவே நடைமுறையில் உள்ள தொழிலாளர் சட்டங்களின் மூலமாக தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் எந்தவொரு சலுகைகளும் பறிக்கப்படவோ அல்லது மாற்றப்படவோ மாட்டாது என்பதை உணர்ந்தே எனது கருத்துக்களை பொதுவெளியில் முன்வைக்கிறேன்.இவ்வாறு தமிழிசை கூறியுள்ளார்.

 

Tags :

Share via