காதல் தம்பதியினர் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த கிருத்திகா பட்டேலின் தந்தை குஜராத்தில் கைது.

தென்காசி மாவட்டம், இலஞ்சி அருகே உள்ள கொட்டாக்குளம் பகுதியில் காதல் திருமணம் செய்து கொண்ட கிருத்திகா பட்டேல்-வினித் காதல் தம்பதியினரை பிரித்து கிருத்திகா பட்டேல் கடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், கிருத்திகா பட்டேல் கடத்தப்படுவது போன்ற சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெறும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
மேலும், இது தொடர்பாக குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருத்திகா பட்டேலை தேடி வந்த நிலையில், கிருத்திகா பட்டேல் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அந்த வீடியோவில், தான் மேத்ரிக் பட்டேல் என்பவரை திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னை யாரும் கடத்தவில்லை எனவும் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து, கிருத்திகாவை மீட்டு தர கோரி வினித் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த நிலையில், கிருத்திகா பட்டேலை நேரில் ஆஜர் செய்ய நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
அதன் அடிப்படையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கிருத்திகா பட்டேல் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் முன்பு ஆஜராகி தன்னை யாரும் கடத்த வில்லை எனவும், தன் விருப்பத்தின் பெயரிலே சென்றதாகவும் நீதிபதிகள் முன்னிலையில் தெரிவித்தார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தென்காசி போலீசார் கிருத்திகா பட்டேலை யாரோ மிரட்டி இது போன்ற கருத்துக்களை சொல்ல வைத்திருக்கிறார்கள். அவருக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என கூறினார்.
அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் அவரை இரண்டு நாள் தென்காசி மாவட்டம் நன்னாகரம் பகுதியில் உள்ள பெண்கள் காப்பகத்தில் வைத்து மனநல ஆலோசனை வழங்கி இரண்டு நாட்களுக்கு பிறகு செங்கோட்டை நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர் செய்து ஒப்புதல் வாக்குமூலம் பெற வேண்டும் என தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில், மன நல ஆலோசனை வழங்கப்பட்டு செங்கோட்டை நீதித்துறை நடுவர் சுனில் ராஜா முன்பு கிருத்திகா பட்டேலை ஆஜர் செய்துஒப்புதல் வாக்குமூலம் பெற்றனர்.
அந்த ஒப்புதல் வாக்குமூலத்திலும் கிருத்திகா பட்டேல் தன்னை யாரும் கடத்த வில்லை எனவும் தான் தனது பெற்றோர்களிடம் செல்வதாக தெரிவித்த நிலையில், கிருத்திகா பட்டேலை அவரது உறவினர்களிடம் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த நிலையில், கிருத்திகா பட்டேல் கடத்தப்பட்டதாக கூறப்படும் வழக்கில் தலைமறைவாக இருந்த கிருத்திகா பட்டேலின் பெற்றோர் முன்ஜாமின் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளைகள் பலமுறை மனு தாக்கல் செய்திருந்த நிலையில், முன் ஜாமின் இதுவரை கிடைக்கவில்லை.
மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெற்ற போது, கிருத்திகா பட்டேலை அழைத்து விசாரணை நடத்த வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்த போது, கிருத்திகா பட்டேலை ஆஜர் செய்ய அவரது உறவினர்கள் மறுக்கவே, கோபமடைந்த நீதிபதிகள் என்ன ஆணவப் படுகொலை செய்ய காத்திருக்கிறீர்களா? என காட்டமான கேள்வி எழுப்பி கிருத்திகா படலின் பெற்றோர்களின் முன் ஜாமின் மனுவையும் தள்ளுபடி செய்து, தேவைப்பட்டால் போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தலாம் என உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த நிலையில், ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் குஜராத் விரைந்த நிலையில், பல நாள் தேடுதல் வேட்டைக்கு பிறகு தற்போது கிருத்திகா பட்டேலின் தந்தையான நவீன் பட்டேலை 28 ஆம் தேதி குஜராத்தில் போலீசார் கைது செய்தனர். அவரை விமான மூலம்திருவனந்தபுரத்திற்கு அழைத்து வந்து அங்கிருந்து தென்காசிக்கு அழைத்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட நவீன் பட்டேல் உடன் அவரது மகளான கிருத்திகா பட்டேலையும் போலீசார் அழைத்து வருவதாக கூறப்படுகிறது.
பல மாதங்களாக தேடி வந்த கிருத்திகா பட்டேலின் தந்தை நவீன் பட்டேல் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தென்காசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : கிருத்திகா பட்டேலின் தந்தை குஜராத்தில் கைது.