2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் பல இடங்களில் கைவரிசை காட்டிய பிரபல
கொள்ளையனை வடபழனி போலீசார் மடக்கி பிடித்திருப்பதற்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ஓசூரைச் சேர்ந்தவன் அறிவழகன். 31 வயதான இவன் பிரபல கொள்ளையன் ஆவான்.
கடந்த 2019-ம் ஆண்டு சென்னை அம்பத்தூர் பகுதியில் கைவரிசை காட்டிய இவன் அப்போது கைது செய்யப்பட்டான். போலீஸ் விசாரணையில் சென்னையில் பல்வேறு இடங்களில் அறிவழகன் வீடு புகுந்து கொள்ளையடித்தது தெரிய வந்தது.
திருமணம் ஆகாத நிலையில் கொள்ளையடிக்கும் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களை மிரட்டி அவன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இந்த நிலையில் திருட்டு வழக்குகளில் கைதாகி சிறையில் இருந்த அறிவழகன் கடந்த மார்ச் மாதம் விடுதலையாகி இருக்கிறான். அதன்பிறகு சென்னைக்கு மீண்டும் வந்து பல இடங்களில் பூட்டிய வீடுகளை குறி வைத்து கொள்ளையடித்து உள்ளான்.
வடபழனி வடக்கு மாடவீதி மற்றும் பக்தவச்சலம் காலனி ஆகிய இடங்களில் 2 வீடுகளில் நகை-பணத்தை கொள்ளையடித்த அறிவழகனை பிடிக்க விருகம்பாக்கம் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.
துணை கமிஷனர் அரிகிரன் பிரசாத் மேற்பார்வையில் வடபழனி உதவி கமிஷனர் பாலமுருகன், இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் ஆகியோர் அடங்கிய தனி படையினர் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையன் அறிவழகனை கண்டுபிடித்தனர்.
அறிவழகன் போலீசில் சிக்காமல் இருக்க மொட்டை அடித்து தலையில் விக் வைத்துக் கொண்டு சுற்றிய ருசிகர தகவல்களும் வெளியாகி உள்ளன.
சென்னையில் வில்லிவாக்கம், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளிலும் இவன் தற்போது கைவரிசை காட்டி இருப்பதாக போலீசார் கூறினார்கள்.
கடந்த 20-ந்தேதி வடபழனி பகுதிகளில் கைவரிசை காட்ட வந்தபோது அறிவழகன் வடபழனி முருகன் கோவிலுக்கு சென்று மொட்டை போட்டுள்ளான். பின்னர் தான் தயாராக வைத்திருந்த விக்கை தலையில் மாட்டிக் கொண்டு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளான்.
எந்த வேலைக்கும் செல்லாமல் கொள்ளையடிப்பதை மட்டுமே தொழிலாக இவன் வைத்திருப்பது தெரியவந்தது.
எம்.பி.ஏ. பட்டதாரியான அறிவழகன் மிகவும் சொகுசாக வாழ்வதற்கு ஆசைப்பட்டு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக போலீசாரிடம் தெரிவித்து உள்ளான்.
இது தொடர்பான போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, “கொள்ளை அடித்த பணத்தில் மசாஜ் சென்டர்களுக்கு அடிக்கடி சென்று அறிவழகன் செலவு செய்துள்ளான்” என்று தெரிவித்தார்.
தினமும் ரூ.20 ஆயிரம் வரையில் அறிவழகன் செலவழித்து வந்ததாகவும், பெண் மோகத்தால் தவறான வழியில் சென்று அதிலிருந்து அவன் மீள முடியாமல் இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் பல இடங்களில் கைவரிசை காட்டிய பிரபல கொள்ளையனை வடபழனி போலீசார் மடக்கி பிடித்திருப்பதற்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
பூந்தமல்லி, வில்லிவாக்கம் பகுதிகளிலும் அறிவழகன் மீது கொள்ளை வழக்குகள் இருப்பதால் அந்த பகுதியைச் சேர்ந்த போலீசாரும் அறிவழகனிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
Tags :