ராஜஸ்தானில் இந்திய ராணுவ விமானம் வீட்டில் மோதி விபத்து.. 3 பேர் உயிரிழப்பு
ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய விமானப்படை விமானம் வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 3 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் சூரத்கர் பகுதியில் உள்ள விமானப்படை ஏவுதளத்தில் இருந்து இந்த விமானம் புறப்பட்டுள்ளது. வழக்கமான ரோந்து பயிற்சிக்காக இந்திய விமானப் படையின் MiG -21 (மிக் -21) ரக விமானத்தை விமானி காலையில் ஓட்டி புறப்பட்டார்.விமானம் ஹனுமான்கர் பகுயில் உள்ள பஹ்லோல் நகர் என்ற கிராமம் அருகே சென்ற போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு கட்டுப்பாட்டை இழந்தது. பயிற்சி விமானி விபத்தை தவிர்க்க கடுமையான முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் பலன் அளிக்காததால் அவர் பாராசூட் மூலம் விமானத்தில் இருந்து குதித்து தப்பியுள்ளார்.தொடர்ந்து விமானம் கிராமத்தில் இருந்த வீட்டின் மீது மோதியதில் அங்கு வசித்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பாராசூட் மூலம் குதித்த விமானியும் சிறிய காயங்களுடன் விபத்தில் இருந்து தப்பி உயிர் பிழைத்தார்.சம்பவம் குறித்து தகவல் அறிந்து நூற்றுக்கணக்கான கிராமத்தினர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து பார்வையிடத் தொடங்கியதால் அப்பகுதி முழுவதும் கூட்டமாக காட்சி அளித்தது. பின்னர் காவல்துறை பகுதியை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இந்தியாவில் மிக் ரக விமானங்தள் விபத்துக்குள்ளாவது தொடர் கதையாக நிகழ்ந்து வருகிறது. 1971-72 தொடங்கி இதுவரை 400க்கும் மேற்பட்ட மிக்-21 ரக விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன. இதில் 200 விமானிகள், 50 பொதுமக்கள் உயிரிழந்ததாக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.Tags :