குற்றாலம் பகுதிகளில் ரூ.15 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
தென்னகத்தின் 'ஸ்பா' என்று அழைக்கப்படும் தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் வருடம் தோறும் 2 முறை சீசன் களைகட்டி வரும் சூழலில், இந்த சீசன் காலகட்டங்களில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளுக்கு வருகை தந்து ஆனந்த குளியல் இடுவது வழக்கம்.
அப்படி, சீசன் காலகட்டங்களில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும், குற்றால அருவிகள் மற்றும் அருவி கரையில் மேற்கொள்ளப்பட உள்ள பராமரிப்பு பணிகளுக்காகவும், குற்றாலம் பகுதியில் உள்ள சிறுவர் பூங்காவை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக தமிழக சுற்றுலாத்துறை அமைச்சகம் மூலம் சுமார் ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குற்றாலம் பகுதியில் வளர்ச்சிப் பணிகள் மேம்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இதற்கான டெண்டர் கோரப்பட்டு தற்போது குற்றாலம் பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமான அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு குற்றாலம் பகுதியில் மேற்கொள்ள உள்ள வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர்.
குறிப்பாக, இன்னும் சில தினங்களில் சீசன் தொடங்க உள்ள சூழலில், அதற்கு முன்பாகவே பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Tags :