10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி: மாணவன் தூக்கிட்டு தற்கொலை

by Staff / 20-05-2023 12:53:04pm
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி: மாணவன் தூக்கிட்டு தற்கொலை

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள கருக்கல்வாடி சேவகனூர் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். வெல்டிங் தொழிலாளி. இவருடைய மனைவி சரண்யா. இவர்களுக்கு நிருபன் (வயது 15) என்ற மகனும், வைஷ்ணவி (7) என்ற மகளும் இருந்தனர். நிருபன் கே. ஆர். தோப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து விட்டு, தேர்வு முடிவுக்காக காத்திருந்தான். வைஷ்ணவி அருகே உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்தநிலையில் நேற்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதன்படி மாணவன் நிருபனின் தந்தை செல்போனுக்கு மதிப்பெண் பட்டியல் அனுப்பப்பட்டது. அதில் நிருபன் சமூக அறிவியல் பாடத்தில் 27 மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அவன் மொத்தம் 189 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தான். பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததால் நிருபன் மனவேதனை அடைந்து அழுதபடியே இருந்தான். அவனை பெற்றோர் தேற்றினர். இதையடுத்து ராமகிருஷ்ணன் வேலைக்கு சென்று விட்டார். சரண்யா மற்றும் சிறுமி வைஷ்ணவி அருகே உள்ள கடைக்கு சென்று விட்டனர். வீட்டில் தனியாக இருந்த நிருபன் தேர்வில் தோல்வி அடைந்ததால் விரக்தி அடைந்து தனது தாயின் சேலையால் படுக்கை அறையில் தூக்கு மாட்டிக்கொண்டான். சிறுது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த சரண்யா, மகன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் நிருபனை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இதனை கேட்டு சரண்யா கதறி அழுதார். இதுபற்றி தகவல் அறிந்த தாரமங்கலம் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் நிருபன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.

 

Tags :

Share via