போலி சான்றிதழ் கொடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்பணி 

by Editor / 17-07-2021 05:25:26pm
போலி சான்றிதழ் கொடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்பணி 

 


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் போலி கல்விச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 10 பேரின் கல்வி சான்றிதழ்கள் போலி என தெரிய வந்துள்ளதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சில ஆண்டுகளுக்கு முன் சேவுகர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தெரிவு செய்யப்பட்டனர். அப்போது அவர்கள் தங்களது கல்வி சான்றிதழை போலியான முறையில் தயார் செய்து பணியில் சேர்த்துள்ளதாக புகார் எழுப்பப்பட்டது. இதில் சேவுகர்கள் காமாட்சி, சத்தியமூர்த்தி ஆகியோர் கொடுத்த சான்றிதழ் போலி என்பது விசாரணையில் தெரிய வந்த நிலையில் தற்போது மேலும் பலர் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.
 மீனாட்சி அம்மன் கோவிலில் மொத்தம் 163 பணியாளர்கள் பணியில் சேர்ந்த நிலையில் அவர்களில் 70 பேரின் கல்விச் சான்றிதழ் குறித்து சந்தேகம் ஏற்பட்டதால் அது குறித்து ஆய்வு செய்ய இணை கமிஷனர் செல்லதுரை உத்தரவிட்டார். மீனாட்சி அம்மன் கோவிலில் பணியில் சேர்ந்த பணியாளர்களின் கல்விச் சான்றிதழை வழங்கிய பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தப்பட்ட போது போலியான சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்தது தெரியவந்துள்ளது. 
தற்போது கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப் பட்டிருக்கும் நிலையில் மேலும் சிலரது கல்விச் சான்றிதழ்கள் பரிசோதனை செய்யப்படாமல் இருப்பதால் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போலி சான்றிதழ் கொடுத்து பணியில் தெரிந்தவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் அளிக்கும் விளக்கம் திருப்தி அளிக்கப்படாத பட்சத்தில் அவர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போலிச் சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்தவர்கள் கோவிலில் எப்படி நேர்மையாக வேலை பார்ப்பார்கள் என்றும் இவ்வாறு போலிச் சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்தவர்களை உடனடியாக பணிநீக்கம் செய்துவிட்டு தகுதியான நபர்களை கோவிலில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 

Tags :

Share via