அனுமதியில்லாத டாஸ்மாக் பார்களுக்கு சீல்
செங்கல்பட்டு மாவட்டத்தில், அனுமதி இல்லாமல் இயங்கும் டாஸ்மாக் 'பார்'கள் மீதான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன. நேற்று நடந்த சோதனையின் போது, அனுமதியின்றி இயங்கிய இரண்டு 'பார்'களுக்கு, 'சீல்' வைக்கப்பட்டது. இந்த நடவடிக்கை மாவட்டம் முழுதும் தொடரும் என, எஸ். பி. , சாய் ப்ரனீத் எச்சரித்துள்ளார்.செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய எட்டு தாலுகாக்களில், 147 டாஸ்மாக் கடைகள் இயங்குகின்றன.மாவட்டம் முழுதும், 150க்கும் மேற்பட்ட இடங்களில், அனுமதியின்றி 'பார்'கள் இயங்குகின்றன.
சில நாட்களுக்கு முன், விழுப்பும் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில், விஷ சாராயம் குடித்து, 22 பேர் இறந்தனர்.கடந்த 21ம் தேதி, தஞ்சாவூர் மாவட்டம், வெள்ளைப்பிள்ளையார்கோவில் பகுதியில் உள்ள டாஸ்மாக் பார் ஒன்றில், சயனைடு கலந்த மது அருந்தி இரண்டு பேர் இறந்தனர்.தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இயங்கும் 'பார்'கள் குறித்து, மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில், நேற்று ஆய்வுக் கூட்டம் நடந்தது.எஸ். பி. , சாய் ப்ரனீத் மற்றும் வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், டாஸ்மாக் கடைகளில் அனுமதி இல்லாமல் இயங்கும் பார்கள் குறித்து, மாவட்டம் முழுதும் ஆய்வு செய்து அறிக்கை தர, தாசில்தார்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.அதன்பின், மாவட்டத்தில், திருக்கழுக்குன்றம் தாலுகாவில், சதுரங்கப்பட்டினம், செய்யூர் தாலுகாவில், கீழ்மருவத்துார் ஆகிய பகுதிகளில், அனுமதியில்லாமல் இயங்கிய 'பார்'களுக்கு, வருவாய்த் துறை அதிகாரிகள் நேற்று 'சீல்' வைத்தனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில், சதுரங்கப்பட்டினம், கீழ்மருவத்துார் ஆகிய பகுதிகளில், அனுமதியில்லாமல் இயங்கிய டாஸ்மாக் 'பார்'களுக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இது, மாவட்டம் முழுதும் தொடரும்.
Tags :