பாலியல் தொழில்  பணம் கொடுப்பதில் வாக்குவாதம்  பெண் வெட்டிக்கொலை-ஒருவன் கைது 

by Editor / 19-09-2024 12:59:42pm
பாலியல் தொழில்  பணம் கொடுப்பதில் வாக்குவாதம்  பெண் வெட்டிக்கொலை-ஒருவன் கைது 

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் குமரன் நகர் குடியிருப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ரத்தக் கறைகளுடன் சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், இது குறித்து துரைப்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

பின்னர், தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த துரைப்பாக்கம் போலீசார், ரத்தக் கறைகளுடன் இருந்த சூட்கேஸைத் திறந்து பார்த்த போது, பெண் ஒருவரை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து இருப்பது தெரியவந்தது. . இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், சூட்கேஸில் துண்டு துண்டாக இருந்த பெண் உடலைக் கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், அந்த உடல் பாகங்களில் உள்ள அடையாளங்களை வைத்து யார் என போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சென்னை மணலி பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க தீபா என்ற பெண் காணாமல் போய் இருப்பது தெரியவந்தது. மேலும் அவர் திருமணம் ஆகாதவர் என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து, கொலை செய்யப்பட்டு இருக்கும் உடல் தீபா என்பதும் போலீசார் விசாரனையில் உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்தில் இந்த பெண்ணை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் எடுத்து வந்து இங்கு வைத்தது யார் என போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். அப்போது, அந்த சூட்கேசை அதே பகுதியில் தங்கியிருந்த ஒரு நபர் வந்து போட்டு விட்டுச் சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து, போலீசார் சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் (25) என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில், நேற்று இரவு பாலியல் தொழிலில் ஈடுபடும் தீபாவை இடைத்தரகர் மூலம் வர வைத்ததாகவும், பின்னர் பணம் கொடுப்பதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் தீபாவை கொலை செய்ததாக தெரியவந்துள்ளது. எனவே, மணிகண்டனை கைது செய்த போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags : பாலியல் தொழில்  பணம் கொடுப்பதில் வாக்குவாதம்  பெண் வெட்டிக்கொலை-ஒருவன் கைது 

Share via

More stories