மதுரையில் ரத்து செய்யப்பட்ட 38 பத்திரிக்கையாளர்களின் வீட்டு மனை பட்டா ஆணையை திரும்பப் பெறுக-துரை வைகோ

by Editor / 29-05-2023 09:33:48pm
மதுரையில் ரத்து செய்யப்பட்ட 38 பத்திரிக்கையாளர்களின் வீட்டு மனை பட்டா ஆணையை திரும்பப் பெறுக-துரை வைகோ

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் பணிபுரியும் பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்யும் திட்டம் முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தின் அடிப்படையில் மதுரை சூர்யா நகரில் 38 பத்திரிகையாளர்களுக்கு தலா 3 செண்ட் வீட்டு மனை ரூ 5.25 இலட்சம் வழிகாட்டி மதிப்பில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டன.

காலக்கிரையத்தில் வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாவை, 'வீட்டுமனை ஒதுக்கீடு பெற்ற பத்திரிகையாளர்களுக்கோ அவரது குடும்பத்தினருக்கோ அங்கிருந்து 50 கிமீ தொலைவில் வேறு எந்த சொத்துக்களும் இருக்கக்கூடாது' என்ற விதியை காரணமாகக் காட்டி, ரத்து செய்துள்ளார் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ் சேகர்.

இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தின் பிற பகுதிகளில் பத்திரிகையாளர்களுக்கு வீட்டு மனை ஒதுக்குவதில் இந்த விதி பின்பற்றப்படாத நிலையில், மதுரையில் மட்டும் பொருந்தாத விதியை காரணமாகக் காட்டி, அரசின் கொள்கை முடிவுக்கு எதிராக வீட்டு மனை ஒதுக்கீட்டை ரத்து செய்தது நியாயத்திற்கு புறம்பான நடவடிக்கை ஆகும்.

ஆகவே, தமிழ்நாடு முதலமைச்சர்  அண்ணன் தளபதி அவர்கள் இதில் தலையிட்டு, ரத்து செய்யப்பட்ட வீட்டுமனை பட்டாவை மீண்டும் பத்திரிகையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,

துரை வைகோ,
தலைமைக் கழகச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.
'தாயகம்'

 

Tags :

Share via