ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை

by Staff / 31-05-2023 01:12:04pm
ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை

சேலம்-வீரபாண்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் நேற்று இரவு வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.அப்போது வாலிபரின் தலை துண்டாகி கிடந்ததால் அவர் ரெயில் தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் கருதினர். அந்த வாலிபரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த வாலிபர் யார்? , எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தினர். இதில் பிணமாக கிடந்த வாலிபர் கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள வெங்கடக்குப்பம் பகுதியை சேர்ந்த சிவா (வயது 21) என்பதும், சேலம் அருகே உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது. சிவா அந்த கல்லூரி விடுதியிலேயே தங்கி படித்துள்ளார்.மேலும் அவர் வடலூரில் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் காதலில் தோல்வி அடைந்த விரக்தியில் சிவா காணப்பட்டு வந்தார். மிகுந்த மனவேதனை அடைந்த அவர் ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via