நாடு முழுவதும் 2 மாதங்களில் 40 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து.

by Editor / 01-06-2023 10:14:18am
நாடு முழுவதும் 2 மாதங்களில் 40 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து.

உலக அளவில் மக்கள் தொகையில் முதல் இடத்தை பிடித்துள்ள இந்தியாவில், அதற்கு ஏற்ற வகையில் டாக்டர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டியது இருக்கிறது.மருத்துவ படிப்பு, இளைய தலைமுறையினரின் கனவு படிப்பாக இருக்கிறது. அதிகமான டாக்டர்களை உருவாக்க ஏற்ற விதத்தில் 2014-ம் ஆண்டு முதல் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை பெருகி வருகிறது. 

 2014-ம் ஆண்டில் நாட்டில் 387 மருத்துவ கல்லூரிகள் இருந்தன. தற்போது இந்த எண்ணிக்கை 654 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 69 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் கடந்த பிப்ரவரி மாதம் மாநிலங்களவையில் மத்திய சுகாதார அமைச்சர் பாரதி பிரவிண்பவார் வெளியிட்டவை ஆகும்.

மருத்துவ கல்லூரிகள் பெருகுகிறபோது எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புக்களின் இடங்களும் அதிகரிக்கின்றன.2014-ம் ஆண்டு மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் 51 ஆயிரத்து 348 ஆகும். தற்போது இந்த இடங்களின் எண்ணிக்கை 99 ஆயிரத்து 763 ஆகும். முதுநிலை மருத்துவ படிப்பு இடங்களின் எண்ணிக்கையும் 107 சதவீதம் அதிகரித்து 31 ஆயிரத்து 185-ல் இருந்து 64 ஆயிரத்து 559 ஆக அதிகரித்துள்ளது.இந்த நிலையில் நாடெங்கும் 2 மாத காலத்தில் 40 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரி, திருச்சி அரசு மருத்துவ கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆகிய 3 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றாமல் காற்றில் பறக்கவிட்டதுதான் மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் ரத்துக்கு முக்கிய காரணம் என தெரிய வந்துள்ளது.இது பற்றி தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறும்போது, "அங்கீகாரம் ரத்தாகி உள்ள மருத்துவ கல்லூரிகள் விதிமுறைகளை பின்பற்றவில்லை. ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாதது, ஆதாருடன் இணைந்த பயோமெட்ரிக் வருகை பதிவு முறை இல்லாதது, போதுமான எண்ணிக்கையில் பேராசிரியர்கள் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளை கொண்டவை ஆகும். இந்த குறைகள் தேசிய மருத்துவ ஆணையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்து நடவடிக்கை பாய்ந்துள்ளது. 


 

 

Tags : 3 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து.

Share via