ரயில் விபத்தில் அடையாளம் தெரிந்த உடல்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இல்லை

by Staff / 04-06-2023 02:50:09pm
ரயில் விபத்தில் அடையாளம் தெரிந்த உடல்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இல்லை

'ஒடிசா ரயில் விபத்தில் இறந்த 288 பேர்களில், 70 பேர் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை' என, ஒடிசா சென்றுள்ள தமிழக குழு தெரிவித்துள்ளது. அமைச்சர்கள் உதயநிதி, சிவசங்கர், போக்குவரத்துத் துறை செயலர் பணீந்திர ரெட்டி, வருவாய்த் துறை செயலர் குமார் ஜெயந்த், ஆசிரியர் தேர்வாணையக்குழு தலைவர் அர்ச்சனா பட்நாயக் ஆகியோர், ஒடிசா சென்றுள்ளனர். அமைச்சர்கள் இருவரும் நேற்று காலை ஹெலிகாப்டரில், விபத்து நடந்த இடத்திற்கு சென்றனர். வருவாய்த் துறை செயலர், ஆசிரியர் தேர்வாணையக்குழுத் தலைவர் ஆகியோர், ஒடிசாவில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு சென்றனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் குறித்த விபரங்களை சேகரித்தனர். பின், நேற்று மாலை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்து பேசினர். இதற்கிடையில், சென்னையில் நேற்று மாலை தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, ஒடிசாவில் உள்ள அமைச்சர் குழுவினரிடம், கள விபரங்களை கேட்டறிந்தார். அப்போது, அவர்கள் கூறியதாவது: பாலசோர் அரசு மருத்துவமனைக்கு சென்று பார்த்தோம். தமிழகத்தைச் சேர்ந்த எவரும் இல்லை. கட்டாக்கில் உள்ள, எஸ். வி. பி. , மருத்துவமனையில், சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர் விபரங்களை சேகரித்து வருகிறோம். தற்போது வரை, தமிழகத்தை சேர்ந்தவர்கள் எவரும் இல்லை. பாலசோர் நகரில், நான்கு இடங்களில் விபத்தில் இறந்த 288 பேரின் உடல்கள் வைக்கப்பட்டுள்ளன. தற்போது வரை அடையாளம் காணப்பட்டுள்ள, 70 உடல்களில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் எவரும் இல்லை என, அங்குள்ள மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். தெற்கு ரயில்வே வெளியிட்ட பயணியர் முன்பதிவு பட்டியலின்படி, விபத்தில் சிக்கிய ரயில்களில் பயணம் செய்தவர்களின் விபரங்கள், அவர்களது உறவினர்கள் வாயிலாக சரிபார்க்கும் பணி, தற்போது நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். 'மேலும் சில நாட்கள்அங்கு தங்கியிருந்து, தமிழகத்தைச் சேர்ந்த பயணியர் அனைவரும் பாதுகாப்பாக சென்னை வந்தடைந்ததை உறுதி செய்ய வேண்டும்' என, முதல்வர் அறிவுறுத்தினார்.

 

Tags :

Share via