ராமேஸ்வரத்தில் கருப்பு கொடியுடன் மீனவர்கள் போராட்டம் 

by Editor / 19-07-2021 04:12:03pm
 ராமேஸ்வரத்தில் கருப்பு கொடியுடன் மீனவர்கள் போராட்டம் 

 


 ஒன்றிய அரசு கொண்டு வரும் புதிய மீன்பிடி மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரத்தில் கருப்பு கொடியுடன் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் புதிய மீன்பிடி சட்ட மசோதாவை ஒன்றிய அரசு தாக்கல் செய்ய உள்ளது. எல்லை வரையறுப்பது, எல்லைதாண்டும் மீனவர்களுக்கு அபாரதத்துடன் சிறை தண்டனை விதிப்பது, மீன்பிடிக்க செல்லும் போது அனுமதி சீட்டு கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட அம்சங்கள் நிறைந்த இந்த மசோதாவுக்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மசோதாவிற்கு எதிராக ராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 
இதனால் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையிலேயே நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக நாள் ஒன்றுக்கு 1 கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்றிய அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் கருப்பு கொடியுடன் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் மத்திய அரசின் சட்ட மசோதாவை ரத்து செய்யக்கோரி கடலூர் மாவட்ட மீனவர் விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடலுக்குள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் தங்களது படகுகளில் கருப்பு கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதேபோல் மீன்பிடி மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் துறைமுகத்திலும் மீனவர்கள் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

 

Tags :

Share via