குற்றால அருவியில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சுற்றுலா பயணிகளிடம் 120 கிராம் தங்கச் சங்கிலி பறிப்பு.

by Editor / 16-07-2023 09:52:59pm
குற்றால அருவியில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சுற்றுலா பயணிகளிடம் 120 கிராம் தங்கச் சங்கிலி பறிப்பு.


தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றாலம் பகுதிக்கு விடுமுறை தினத்தை கொண்டாட வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

இந்த சூழலில், குற்றாலம் பகுதியில் உள்ள மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்து வரும் நிலையில், குற்றாலம் பகுதியில் உள்ள மற்ற அருவிகளில் கூட்டத்திற்கு ஏற்றால் போல் வரிசையிலும், மொத்தமாகவும் சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்றாலம் பகுதியில் செயின் பறிப்பு சம்பவங்கள் என்பது தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

குறிப்பாக, அருவிகளில் ஆனந்த குளியலிடும் பெண் சுற்றுலா பயணிகளிடம் செயின் பறிப்பு சம்பவங்கள் என்பது தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

 விடுமுறை தினமான இன்று மட்டும் குற்றால அருவிகளில் குளித்துக் கொண்டிருந்த பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த வளர்மதி(வயது 58), சரோஜா (70), வானஜோதி (60), சென்னையை சேர்ந்த பரமேஸ்வரி(58), வி.கே.புரம் பகுதியை சேர்ந்த ஐய்யம்மாள் (31) உள்பட 6 பெண் சுற்றுலா பயணிகளிடம் சுமார் 120 கிராம் மதிக்கத்தக்க தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டுள்ள சம்பவம் சுற்றுலா பயணிகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

 குறிப்பாக, குற்றாலம் பகுதியில் விடுமுறை தினங்களில் அளவுக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் கூட்டம் கூடுவார்கள் என்பது தெரிந்தும் கூடுதல் போலீசாரை பணியில் அமர்த்தாமல் விட்டதன் காரணமாக தான் இது போன்ற தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள் என்பது அரங்கேறி உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இந்தத் தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள் குறித்து குற்றாலம் போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்து, செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via