ரகசிய அறை அமைத்து லாட்டரி விற்பனை 6 பெண்கள் உள்பட 7 பேர்கைது.

by Editor / 19-07-2023 09:29:37pm
ரகசிய அறை அமைத்து லாட்டரி விற்பனை 6 பெண்கள் உள்பட 7 பேர்கைது.

தமிழகத்தில் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.அதே சமயம் தமிழக கேரளா எல்லைப்பகுதியான குமரி மாவட்டத்தில் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து லாட்டரி வாங்கி வந்து திருட்டுத்தனமாக விற்பனை நடைபெற்று வருகிறது. மேலும் ஆன்லைன் மூலமும் லாட்டரி விற்பனை செய்யப்படுகிறது. 3 நம்பர் லாட்டரி, 4 நம்பர் லாட்டரியும் புழக்கத்தில் உள்ளது. எனவே இதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் லாட்டரி விற்பனை நடப்பதாக கோட்டார் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் தலைமையிலான போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது 6 பெண்கள் உள்பட மொத்தம் 7 பேர் லாட்டரி விற்றது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து தெரிசனங்தோப்பு அருகில் உள்ள ஞாலம் மேலத்தெருவைச் சேர்ந்த கிஷோர் (வயது 31), ஈசாந்திமங்கலம் செண்பகநகரைச் சேர்ந்த ஜோதி (32), பள்ளிவிளை ரெயில்வேநகரை சேர்ந்த அபினேஸ்வரி (19), ராஜாக்கமங்கலம் அருகில் உள்ள காரவிளையை சேர்ந்த அஞ்சு (22), கோட்டார் சரலூரைச் சேர்ந்த கலைச்செல்வி (26), அனந்த நாடார் குடியிருப்பைச் சேர்ந்த மேகலா (45), ஆசாரிப்பள்ளம் மேலப்பெருவிளையைச் சேர்ந்த பெனிட்டா (29) ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.55 ஆயிரம் ரொக்கம், விற்பனைக்காக வைத்திருந்த ரூ.11 ஆயிரத்து 40 மதிப்புள்ள 276 லாட்டரி சீட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நிலையில் லாட்டரி விற்பனை பற்றி பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது கைதான பெண்களில் 5 பேர் இளம்பெண்கள் ஆவார்கள். லாட்டரி சீட்டு விற்ற பெண்களுக்கு மாத சம்பளமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் ஒரு நாள் படியாக ரூ.100 வழங்கப்பட்டு இருக்கிறது.
மேலும் லாட்டரி விற்பனையானது பொதுமக்கள் அதிகம் புழங்கும் இடமான மீனாட்சிபுரத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் மாடியில் ரகசிய அறையில் நடந்துள்ளது.

மேலும் அங்கு வாடிக்கையாளர்கள் லாட்டரி வாங்க வரலாமா? வேண்டாமா? என்பதை தெரிவிப்பதற்காக அந்த அறையின் முன் சிக்னல் கொடுப்பதற்காக பச்சை மற்றும் சிவப்பு நிறத்தில் 2 விளக்குகள் உள்ளன. பச்சை நிறம் எரிந்தால் லாட்டரி வாங்க வரலாம் என்று அர்த்தம். அதுவே சிவப்பு நிறம் எரிந்தால் விற்பனை நடைபெறவில்லை என்று அர்த்தம். இந்த விவரங்கள் அனைத்தும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்றும் விசாரணை நடந்து வருகிறது.
 

ரகசிய அறை அமைத்து லாட்டரி விற்பனை 6 பெண்கள் உள்பட 7 பேர்கைது.
 

Tags :

Share via