ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான ஆணையம் ஸ்டாலினிடம் அறிக்கை அளிப்பு
தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான ஆணையம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையை சமர்ப்பித்து இருக்கிறது.
என்ஜினீயரிங், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் சேர்க்கை குறைவாக உள்ள நிலையில், அதனை சரிசெய்வதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்ய ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது.
ஓய்வுபெற்ற டெல்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினரை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். அதன் தொடர்ச்சியாக இந்த குழுவினர் பல்வேறு கட்டங்களாக ஆலோசனை நடத்தி வந்தனர். தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்கள் எந்த அளவுக்கு சேர்ந்து இருக்கின்றனர் என்பதற்கான புள்ளி விவரங்களை அந்தந்த துறை சார்ந்த படிப்புகளில் இருந்து பெறப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலோசித்து வந்தனர்.
இந்த ஆணையம் அமைக்கப்பட்டதில் இருந்து ஒரு மாத காலத்துக்குள் அரசுக்கு பரிந்துரைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி, ஆணையத்துக்கு வழங்கப்பட்டு இருந்த கால அவகாசமும் முடிந்தது.
இந்த நிலையில், ஆணையத்தின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவினர், தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்கள் எவ்வளவு பேர் கடந்த ஆண்டில் சேர்ந்து இருக்கின்றனர்?, அவர்களின் சமூக பொருளாதார நிலைகள் எந்த அளவில் இருக்கிறது? என்பது குறித்தும், தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு எந்த அளவு உள்ஒதுக்கீடு வழங்கலாம்? என்பது உள்பட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய 86 பக்க அறிக்கையை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியுள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த அறிக்கையை முழுவதுமாக படித்து பார்த்ததாகவும், விரைந்து அது தொடர்பான உத்தரவை பிறப்பிப்பதாகவும் ஆணையத்திடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆணையம் பரிந்துரைத்து இருக்கும் உள் ஒதுக்கீட்டை பரிசீலித்து, நடப்பு கல்வியாண்டிலேயே சம்பந்தப்பட்ட தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Tags :