சங்கரநாராயணசுவாமி கோயிலில் ஆடித்தவசுத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

by Editor / 21-07-2023 12:11:37pm
சங்கரநாராயணசுவாமி கோயிலில் ஆடித்தவசுத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க  சிவலாயமான தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோயிலில் ஆடித்தவசுத் திருவிழா ஆண்டுதோறும் ஆடிமாதம் 12 நாள்கள் நடக்கும். இத்திருவிழா. இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, கொடிப்பட்டம் வீதிசுற்றி கோமதி அம்பாள் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு கொடிப் பட்டத்திற்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் கொடியேற்றப்பட்டது. கொடிமரம் ஹோமத்தில் வைக்கப்பட்டிருந்த 9 கும்பங்களின் கலசநீர் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது.
 
கொடிமரம் தர்ப்பைப்புல், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அதற்கு பட்டுபரிவட்டம் கட்டப்பட்டது. பின்னர் கொடிமர பீடத்திற்கு மஞ்சள், விபூதி, பால், தயிர், இளநீர், தேன், வாசனைத் திரவியம் இதோடு ஏற்கனவே ஹோமத்தில் வைக்கப்பட்டிருந்த 9 கும்பங்களின் கலசநீர் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து வேதமந்திரங்கள் ஓத சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜா, கோயில் இணை ஆணையர் அன்புமணி, துணை ஆணையர் ஜான்சிராணி, உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தேரோட்டம்: 9ம் திருநாளான ஜூலை 29ஆம் தேதி காலை கோமதிஅம்பாள் எழுந்தருளும் தேரோட்டம் நடைபெறுகிறது. 11 ஆம் திருநாளான ஜூலை 31 ஆம் ஆம் தேதி திங்கள்கிழமை மாலை 6.30 மணிக்கு மேல் ஆடித்தவசுக் காட்சி நடைபெறும். அப்போது சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சங்கரநாராயணராகவும், பின்னர் இரவு 12 மணிக்கு அதே இடத்தில் யானை வாகனத்தில் எழுந்தருளி சங்கரலிங்க சுவாமியாகவும் அம்பாளுக்கு காட்சிக் கொடுக்கும் ஆடித்தவசுக் காட்சி நடைபெறும்.


 

 

Tags :

Share via