அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் - ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை
ஈரோடு புறநகர் மாவட்டத்துக்கு புதிய மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
கழக நிர்வாக வசதியைக் கருத்தில்கொண்டு, 'ஈரோடு புறநகர் மாவட்டம்' என செயல்பட்டு வரும் மாவட்ட கழக அமைப்பு, இன்று முதல் கழக அமைப்பு ரீதியாக 'ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம்', 'ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம்' என இரண்டு மாவட்டக் கழகங்களாகப் பிரிக்கப்பட்டு கீழ்க்கண்ட சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி செயல்படும் என கூறியுள்ளனர்.
அதன்படி, ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டத்தில், பவானி சட்டமன்றத் தொகுதி (104), பெருந்துறை சட்டமன்றத் தொகுதி (103) ஆகிய இரண்டும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தில் கோபி செட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதி (106), அந்தியூர் சட்டமன்றத் தொகுதி (105) மற்றும் பவானிசாகர் (தனி) சட்டமன்றத் தொகுதி (107) ஆகிய மூன்றையும் உள்ளடக்கி உள்ளது.
இதன் அடிப்படியில், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழகம், மாவட்ட செயலாளராக எம்எல்ஏ, கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சருமான கே.ஏ செங்கோட்டையன் மற்றும் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழகம், மாவட்ட செயலாளராக எம்எல்ஏ, முன்னாள் அமைச்சருமான கே.சி கருப்பணன் ஆகியோர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
கழக அமைப்பு ரீதியாக தற்போது பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கூறியுள்ளனர்.
ஈரோடு புறநகர் கிழக்கு, ஈரோடு புறநகர் மேற்கு ஆகிய மாவட்டங்களுக்கு, மாவட்ட அளவில் திருத்தி அமைக்கப்பட்ட கழகம் மற்றும் சார்பு அமைப்புகளுக்கான நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும் வரை, தற்போதுள்ள நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாகப் பொறுப்புகளில் தொடர்ந்து செயலாற்றுவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.
Tags :