தி.மு.க., பிரமுகர் வெடிகுண்டு வீசி வெட்டி கொலை
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், எச்சூர் ஊராட்சி தலைவராக இருப்பவர் குமுதா டோம்னிக். இவரது மகன் ஆல்பர்ட், 30, ஸ்ரீபெரும்புதுார் ஒன்றிய தி. மு. க. , இளைஞர் அணி பொறுப்பாளர். தொழிற்சாலைகளில் 'ஸ்கிராப்' எடுப்பது, கட்டுமான பொருட்கள் வினியோகிப்பது, டிரான்ஸ்போர்ட் உள்ளிட்ட தொழில்களையும் ஆல்பர்ட் செய்து வந்தார். சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில், இவர் மீது பல வழக்குகள் உள்ளன.இந்நிலையில், நேற்று மாலை 6: 30 மணி அளவில், எச்சூர் கிராமத்தில் உள்ள தொழிற்சாலை பகுதியில், காரில் இருந்து இறங்கி நண்பர்கள் நான்கு பேருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர், இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை ஆல்பர்ட் மீது வீசினர். இதில், ஆல்பர்ட் மற்றும் அவரது நண்பர்கள் நிலை குலைந்தனர். ஆல்பர்டுடன் இருந்தவர்களில் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, மர்ம கும்பலில் இருந்தவர்கள் கத்திகளுடன் இறங்கினர். ஆல்பர்ட்டின் முகம், தலையில் சரமாரியாக வெட்டினர். தடுக்க வந்த அவரது நண்பர்கள் சிலரையும் வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதையடுத்து, ஆல்பர்டை அவரது நண்பர்கள் காரில் ஏற்றி, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஆல்பர்ட் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
Tags :