2 லட்சம் விதையுடன் 50,000 விதைப்பந்துகளை தயாரித்து ஒரு நிமிடத்தில் உலக சாதனை
பாளை இக்னேசியஸ் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 5 ஆயிரம் மாணவிகள் ஒன்று சேர்ந்து 2 லட்சம் விதைகளைக் கொண்ட 50 ஆயிரம் விதைப்பந்துகளை ஒரு நிமிடத்தில் தயாரித்து உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இந்த நிகழ்வின்போது இக்னேசியஸ் பள்ளி மாணவிகள் மற்றும் இக்னேசியஸ் கல்வியியல் கல்லூரி மாணவிகள் என 5 ஆயிரம் பேர் ஒன்று சேர்ந்து பள்ளி வளாகத்தில் அமர்ந்து ஒரு நிமிடத்தில் ஒவ்வொரு விதைப்பந்திலும் 4 விதைகள் என்றவாறு ஒரு மாணவி 10 வீதம் மொத்தம் 2 லட்சம் விதைகளை கொண்டு 50 ஆயிரம் விதைப்பந்துகளை தயாரித்து உலக சாதனை படைத்தனர்.
வேம்பு, கொய்யா, பலா, நாவல், புளி, மகாகனி ஆகிய மரங்களின் விதைகளை வைத்து விதைப்பந்துகளை தயாரித்தனர்.இதற்காக கடந்த ஒரு வாரமாக மாணவிகள், அவர்களின் பெற்றோர், பள்ளியின் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர், பள்ளி ஆசிரியைகள் ஆகியோர் களிமண், பல்வேறு விதைகளை சேகரிப்பது மற்றும் தேவையான தண்ணீர் போன்றவற்றுக்கான ஏற்பாடுகளை செய்தனர்.
தற்போது தயாரிக்கப்பட்டுள்ள விதைப்பந்துகளை தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் விரைவில் விதைத்து மரங்களை உருவாக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.
Tags : 2 லட்சம் விதையுடன் 50,000 விதைப்பந்துகளை தயாரித்து ஒரு நிமிடத்தில் உலக சாதனை