செப்டம்பர் 12ந்தேதி நடைபெறும் ‘நீட்’ தேர்வு ஒத்திவைக்கப்படாது:  மத்திய அமைச்சர்

by Editor / 23-07-2021 04:41:36pm
 செப்டம்பர் 12ந்தேதி நடைபெறும் ‘நீட்’ தேர்வு ஒத்திவைக்கப்படாது:  மத்திய அமைச்சர்

 


கொரோனா 3வது அலை அச்சுறுத்தல் காரணமாக ‘நீட்' தேர்வு ஒத்திவைக்கப்படாது. செப்டம்பர் 12ந்தேதி நிச்சயம் நடைபெறும் என்று பார்லிமெண்டில் மத்திய சுகாதார இணை அமைச்சர் பிரவீன் பாரதி தெரிவித்தார்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்' என்ற நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த கல்வியாண்டிலும் ‘நீட்’ தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் தேர்வு மையங்களை அதிகரித்து, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேசிய தேர்வு முகமை மூலம் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு தாமதமாக நடத்தப்பட்டதால், கடந்த ஆண்டில் மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கையும் சற்று தாமதமானது.
இந்த நிலையில் நாடு முழுவதும் வருகிற செப்டம்பர் மாதம் 12-ந்தேதி ‘நீட்’ தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கான விண்ணப்ப பதிவு இணையதளத்தில் கடந்த ஜூலை 13 ந்தேதி முதல் தொடங்கியது.
இந்நிலையில் பாராளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கேட்ட கேள்விக்கு மத்திய சுகாதார இணை அமைச்சர் பிரவீன் பாரதி பதில் அளிக்கையில் கூறியதாவது:
கொரோனா 3வது அலை அச்சுறுத்தல் காரணமாக ‘நீட்' தேர்வு மற்றும் பிற பொது தேர்வுகளும் ஒத்திவைக்கப்படாது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, நாடு முழுவதும் செப்டம்பர் 12 ந்தேதி நீட் தேர்வு நிச்சயம் நடைபெறும். தள்ளிப்போக வாய்ப்பில்லை.சமூக இடைவெளி பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக, தேர்வு நடத்தப்படும் நகரங்களின் எண்ணிக்கை யும், தேர்வு மையங்களும் அதிகரிக்கப்பட உள்ளது.தேர்வு எழுதுவதற்காக ஒவ்வொரு மையங்களுக்கும் வரும் மாணவர்களுக்கு முககவசம் வழங்கப்படும். தேர்வு மையங்களுக்கு வரும் நேரங்கள், வெளியேறும் நேரங்கள், அங்கு எந்தவித தொடர்பும் இல்லாத வகையில், ‘சானிடைசர்’ கொண்டு சுத்தம் செய்வது உறுதி செய்யப்படும் என்று பதில் அளித்து, இதனை எழுத்துப்பூர்வமாகவும் தெரிவித்தார்.கடந்த ஆண்டு ‘நீட்' தேர்வுக்கு நாடு முழுவதும் 15 லட்சத்து 93 ஆயிரத்து 452 பேரும், இதில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 502 பேரும் எழுத விண்ணப்பித்து இருந்தார்கள்.
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் .

 

Tags :

Share via