ஓடும் பைக்கில் டயர் வெடித்து தொழிலாளி பலி
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே குறும்பனையை சேர்ந்தவர் ஏசுதாசன். இவரது மகன் கில்பன் ஜோஸ்(36). இவர் குளச்சல் மீன் பிடித்துறைமுகத்தில் விசைப்படகில் மீன் பிடித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் மீன் பிடிக்க சென்ற விசைப்படகு நேற்றிரவு கரை திரும்பியது. இன்று காலை கில்பன் ஜோஸ் குறும்பனை வீட்டிற்கு வந்துவிட்டு மீன்களை இறக்குவதற்கு குளச்சல் மீன் பிடித்துறைமுகத்திற்கு மீண்டும் பைக்கில் சென்றார். பைக் வாணியக்குடியில் செல்லும்போது, அவர் ஓட்டி சென்ற பைக்கின் முன் பக்க டயர் எதிர்ப்பாராமல் திடீரென பஞ்சராகி வெடித்தது. இதில் பைக் கட்டுப்பாடு இழந்து கில்பன் ஜோசை தூக்கி வீசியது. படுகாயமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு நாகர்கோவிலில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக உடலை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் பைக்கில் டயர் பஞ்சராகி வெடித்து பலியான மீன் பிடித்தொழிலாளி கில்பன் ஜோசுக்கு திருமணமாகி அனுஷா என்ற மனைவி உள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags :



















