எம். எல். ஏ. குடும்பத்துடன் போலீஸ் நிலையத்தில் ஆஜர்
மேட்டூர் சட்டசபை தொகுதி எம். எல். ஏ. வாக பா. ம. க. வை சேர்ந்த சதாசிவம் உள்ளார். கடந்த மாதம் 19-ந் தேதி அவருடைய மருமகள் மனோலியா, சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார். அதில் தன்னிடம் வரதட்சணை கேட்டு கணவர், மாமனார் உள்பட சிலர் துன்புறுத்துவதாக கூறி உள்ளார்.அதன்பேரில் மனோலியாவின் கணவர் சங்கர், மாமனார் சதாசிவம் எம். எல். ஏ. உள்பட 4 பேர் மீது போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு சதாசிவம் எம். எல். ஏ. தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு சதாசிவம் எம். எல். ஏ. ஆஜராக வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.இந்த நிலையில் நேற்று காலை சதாசிவம் எம். எல். ஏ. வின் மனைவி பேபி, மகள் கலைவாணி ஆகியோர் சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகினர். அப்போது அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா விசாரணை நடத்தினார். அவர்களிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.அதைத்தொடர்ந்து பிற்பகல் 3. 10 மணி அளவில் சதாசிவம் எம். எல். ஏ. மற்றும் அவருடைய மகன் சங்கர் ஆகியோர் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார்கள். அவர்களிடமும் இந்த வழக்கு தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
Tags :