சிவகங்கை மருத்துவ மாணவர் கொலையில் 2 பேர் அதிரடி கைது

by Admin / 26-07-2021 03:15:28pm
சிவகங்கை மருத்துவ மாணவர் கொலையில் 2 பேர் அதிரடி கைது

 


   
சிவகங்கை மருத்துவ மாணவர் கொலையில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை அண்ணாமலை நகரில் வசிப்பவர் இருதயராஜ், ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மகன்கள் ஜோசப் சேவியர் (வயது 25), கிறிஸ்டோபர் (22).

இவர்கள் இருவரும் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவ படிப்பு படித்து வந்தனர். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக 2 பேரும் நாடு திரும்பி சிவகங்கையில் இருந்து வந்தனர்.

இவர்களுக்கு சொந்தமான 20 ஏக்கர் விவசாய நிலம் அதே பகுதியில் உள்ளது. இங்கு சிலர் மது அருந்துவதாக கிடைத்த தகவலின்பேரில் இருதயராஜ் மற்றும் ஜோசப் சேவியர், கிறிஸ்டோபர் அங்கு சென்றுள்ளனர்.

அப்போது அங்கு சிலர் மது அருந்தி விட்டு தோட்டத்து வீட்டை உடைத்து கொண்டிருந்தனர். இதை பார்த்த இருதயராஜ் மற்றும் அவரது மகன்கள் ஜோசப் சேவியர், கிறிஸ்டோபர் ஆகியோர் தடுத்தனர்.

அப்போது ஏற்பட்ட மோதலில் கிறிஸ்டோபர் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் நகர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இதில் கொலை நடந்தது எப்படி? என்பது குறித்து பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-

இருதயராஜிக்கு சொந்தமான 20 ஏக்கர் விவசாய நிலத்தில் பழைய வீடும் உள்ளது. ஆனால் அங்கு இருதயராஜ் குடும்பத்தினர் செல்வது இல்லை. இதனால் வீடு பாழடைந்த நிலையில் இருந்து வந்தது.

இதனை சமூக விரோதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த தொடங்கி உள்ளனர். அடிக்கடி அங்கு சிலர் மது அருந்துவதும், விரும்பதகாத செயல்களில் ஈடுபடுவதுமாக இருந்து வந்துள்ளனர்.

நேற்றும் அங்கு ஒரு கும்பல் மது அருந்தி கொண்டிருந்தது. இதனை பார்த்த அந்த பகுதியில் ஆடு மேய்ப்பவர்கள் இருதயராஜ் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் இருதயராஜ், அவரது மகன்கள் ஜோசப் சேவியர், கிறிஸ்டோபர் ஆகியோர் மாலை 3 மணி அளவில் அங்கு விரைந்து வந்தனர்.

அப்போது மது அருந்திய கும்பல் வீட்டின் கதவை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை பார்த்ததும் இருதயராஜ் தட்டிக் கேட்டார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இருதயராஜ் தனது மகன் கிறிஸ்டோபரிடம் மர்ம கும்பல் மது அருந்து வதை செல்போனில் படம் பிடிக்குமாறு கூறினார். அதன்பேரில் கிறிஸ்டோபரும் தனது செல்போனை எடுத்து மது அருந்திய கும்பலை படம் பிடித்தார். இது அந்த கும்பலுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

அவர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாளை எடுத்து கிறிஸ்டோபரை சரமாரியாக வெட்டினர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த இருதயராஜூம், ஜோசப் சேவியரும் தடுக்க முயன்றனர். இதில் அவர்களுக்கும் கத்திக்குத்து விழுந்துள்ளது. 3 பேரும் ரத்த வெள்ளத்தில் சாய்ந்ததும் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதில் கிறிஸ்டோபர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கிறிஸ்டோபர் உடல் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் காயம் அடைந்த இருதயராஜ், ஜோசப் சேவியர் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி தள்ளு வண்டியில் காய்கறி வியாபாரம் செய்யும் வாணியங்குடியைச் சேர்ந்த மருதுபாண்டி, சிவகங்கை நேரு பஜார் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் ஆகியோரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.

இந்த கொலை சம்பவத்தில் 10-க்கும் மேற்பட்டோருக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். வழக்கமாக உள்ளூர்காரர்கள் மது அருந்த சென்றால் சாதாரணமாக லுங்கி, சட்டை அணிந்து தான் செல்வார்கள். ஆயுதங்கள் எதுவும் கொண்டு செல்லமாட்டார்கள். ஆனால் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஆயுதங்களை வைத்து இருந்ததோடு பேண்ட், சர்ட் அணிந்தும் இருந்துள்ளனர்.

எனவே அவர்கள் வேறு ஏதும் சம்பவத்திற்காக வந்த கூலிப்படையாக இருக்கலாமா? மது அருந்துவதை கிறிஸ்டோபர் செல்போனில் படம் பிடித்ததால் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்ற ஆத்திரத்தில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டார்களா? என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தப்பி சென்றவர்கள் கிறிஸ்டோபரின் செல்போனையும் எடுத்து சென்று விட்டதால் இது கூலிப்படையினரின் கை வரிசையாக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

கொலையாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் அமைத்து போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் சிவகங்கை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via