காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பே கடைசி தீர்ப்பு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

by Staff / 26-09-2023 04:19:27pm
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பே கடைசி தீர்ப்பு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

சென்னை கோட்டூர்புரத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் கர்நாடக மாநிலத்தின் பந்த் அறிவிப்பு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அவர்களுடைய மாநிலத்தில் பந்த் நடத்துவது குறித்து நான் ஒன்றும் கருத்து சொல்ல முடியாது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத்தான், கடைசி தீர்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். கூட்டாட்சித் தத்துவத்தில் சட்டமன்றம், நிர்வாகம், நீதித்துறை என்ற மூன்று பிரிவுகள் உள்ளன. இந்த மூன்றில் நீதித்துறை என்ன சொல்கிறதோ, அதை சட்டமன்றமும், நிர்வாகமும் பின்பற்ற வேண்டும் என்று கூறுவார்கள்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழகத்துக்கு 13. 09. 2023 முதல் 15 நாட்களுக்கு 5000 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டது. அதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. அதாவது நாளையுடன் (செப். 27) அந்த 15 நாட்கள் கெடு முடிகிறது. இதனிடையே கர்நாடகத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றாலும், நமக்கு தரவேண்டிய தண்ணீரை தந்து கொண்டிருக்கிறார்கள். தற்போது வரக்கூடிய தண்ணீரை வைத்து குறுவை சாகுபடியை சமாளித்து விடலாம் என்று தெரிவித்தார்.
 

 

Tags :

Share via