தங்கையின் கணவரை கொலை செய்த இரண்டு பேர் கைது

by Staff / 28-09-2023 04:42:39pm
தங்கையின் கணவரை கொலை செய்த இரண்டு பேர் கைது

நாகை வெளிப்பாளையம் நல்லியான் தோட்டம் அருகே கடந்த 17-ம் தேதி ரயில் தண்டவாளத்தில் இறந்த நிலையில் ஒரு ஆண் பிணம் கிடந்தது. பிணத்தை கைப்பற்றி நாகை ரயில்வே போலீஸார் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போன நபர், நாகை காடம்பாடி திரௌபதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த முத்து என்கிற கலியபெருமாள் (27) என அவரது உறவினர்கள் அடையாளம் காட்டிய பிறகு பிரேத பரிசோதனை நடைபெற்றது. பிரேத பரிசோதனை செய்த மருத்துவர், கலியபெருமாளின் கழுத்தில் ஆழமான வெட்டுக் காயம் இருப்பதாகவும், அந்த காயம் கத்தி போன்ற ஆயுதத்தால் தாக்கும்போது மட்டுமே ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், கொலையை மறைப்பதற்காகவே கலியபெருமாளின் உடலை தண்டவாளத்தில் போட்டுள்ளனர். அதனால் அந்த வழியாக வந்த ஒரு ரயில் மோதியதில் கலியபெருமாளின் உடலில் மற்ற காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தார்.அதன்பேரில், நாகை ரயில்வே போலீஸார் கலியபெருமாளின் செல்போனை வாங்கி விசாரணை நடத்தினர். விசாரணையில், சந்தேகத்தின் அடிப்படையில், நாகை காடம்பாடியை சேர்ந்த சூரியகிருபா (21), காடம்பாடி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த கார்த்தி (19) ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கலியபெருமாளை கொலை செய்ததை 2 பேரும் ஒப்புக்கொண்டனர். சூரியகிருபா என்பவர், இறந்த கலியபெருமாளின் மைத்துனர் ஆவார்.

 

Tags :

Share via

More stories